வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (07/02/2018)

கடைசி தொடர்பு:10:56 (07/02/2018)

ஊதிய உயர்வு தொடர்பாகப் பிப்ரவரி 9-ல் பேச்சுவார்த்தை! - போக்குவரத்துத் தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு

போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக, நீதிபதி பத்மநாபன் தலைமையில், வரும் 9-ம் தேதி முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 

ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நிலுவையில் உள்ள பணப் பலன்களை உடனடியாக அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்துத் தொழிலாளர்கள் 8 நாள்களாக நடத்திய போராட்டம், உயர் நீதிமன்றம் தலையீட்டின் பேரில் முடிவுபெற்றது. இதுதொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மணிக்குமார் தலைமையிலான அமர்வு, இந்த விவகாரத்தில், ஊதிய உயர்வு தொடர்பாக அரசு மற்றும் போக்குவரத்துக் கழக ஊழியர்களிடையே மத்தியஸ்தராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பத்மநாபனை நியமித்து உத்தரவிட்டது. இதையடுத்து, போக்குவரத்துக் கழக ஊழியர்கள், தங்கள் போராட்டத்தைத் திரும்பப்பெற்று பணிக்குத் திரும்பினர். 

இந்த நிலையில், ஊதிய உயர்வு தொடர்பான முதல்கட்ட பேச்சுவார்த்தை, வரும் 9-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதி பத்மநாபன் தலைமையில், சென்னையில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளுமாறு போக்குவரத்துத் தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.