வெளியிடப்பட்ட நேரம்: 10:30 (07/02/2018)

கடைசி தொடர்பு:13:21 (07/02/2018)

பாரதியார் பல்கலைக்கழகப் பதிவாளரிடம் விளக்கம் கேட்கும் உயர் கல்வித்துறை! - நாளை கூடுகிறது சிண்டிகேட்

பாரதியார் பல்கலைக்கழகத்தில் நாளை (8.2.2018) காலை 11.30 மணிக்கு சிண்டிகேட் கூட்டம் நடைபெற உள்ளது.

பாரதியார் பல்கலைக்கழகம்

லஞ்சப் புகாரில் கைதுசெய்யப்பட்ட கணபதி, பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொறுப்பிலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதில், இடைத்தரகராகச் செயல்பட்ட வேதியியல் துறை பேராசிரியர் தர்மராஜ் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், தொலைநிலைக் கல்வி இயக்குநர் மதிவாணனிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்க, தமிழக அரசுக்கு கோவை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதையடுத்து, பல்கலைக்கழகப் பதிவாளர் வனிதாவை, உயர் கல்வித்துறை சென்னைக்கு அழைத்தது. 

இதைத் தொடர்ந்து, பாரதியார் பல்கலைக்கழகத்தில், நாளை காலை 11.30 மணிக்கு சிண்டிகேட் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயர் கல்வித்துறைச் செயலாளர் சுனில்பாலிவால் தலைமையில், இந்தக்கூட்டம் நடைபெற உள்ளது. துணைவேந்தர் இல்லாத காரணத்தினால், அரசின் வழிநடத்துதல்படி இந்தக் கூட்டம் கூட்டப்படுகிறது. கூட்டத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள்குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. குறிப்பாக, பல்கலைக்கழகத்தை நிர்வகிப்பதற்காக, துணைவேந்தர் பொறுப்புக்குழு அமைப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.