சாதி மறுப்புத் திருமணத்துக்கு ரூ.2.50 லட்சம் நிதி! - தமிழர்களைத் தவிக்கவிடும் மத்திய அரசு | Legal issues behind central government's Intercaste marriage incentive scheme

வெளியிடப்பட்ட நேரம்: 10:46 (07/02/2018)

கடைசி தொடர்பு:11:34 (07/02/2018)

சாதி மறுப்புத் திருமணத்துக்கு ரூ.2.50 லட்சம் நிதி! - தமிழர்களைத் தவிக்கவிடும் மத்திய அரசு

மத்திய, மாநில அரசுகள் ஒவ்வோர் ஆண்டும் தாக்கல் செய்யும் நிதிநிலை அறிக்கையில் நலத்திட்டங்களுக்கென்று பல கோடி ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிப்பார்கள். ஆனால், அந்தப் பல கோடிகளும் அடித்தட்டு மக்களைச் சென்று சேர்கிறதா என்பதுதான் கேள்வி. அரசு அறிவிக்கும் நலத்திட்டங்கள் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும் அதைப் பெறுவதற்கான வழிமுறை தெரியாமல் மக்கள் தவிக்கின்றனர். அப்படியொரு தவிப்புக்கு ஆளாகியிருக்கிறார் திருவாரூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கலையரசன். 

kalaiarasan

கலையரசன் - ஜான்சி ராணி

திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகாவுக்கு உட்பட்ட அன்னவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் கலையரசன். இவருடைய மனைவி ஜான்சி ராணி திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இரு வீட்டாரின் கடுமையான எதிர்ப்புக்கு இடையில், கடந்த 2015-ம் ஆண்டு கலப்பு திருமணம் செய்துகொண்டனர். இதில், கலையசரன் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர். அவருடைய மனைவி  பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். கலப்புத் திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு மத்திய அரசின் நிதி உதவியாக இரண்டரை லட்ச ரூபாய் கிடைப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், இவரும் விண்ணப்பித்தனர். இதன்பிறகு நடந்த விவரங்களை நம்மிடம் விவரித்தார் கலையரசன், 

'கலப்புத் திருமண நிதி உதவிக்காக, கடந்த 2015-ம் ஆண்டு விண்ணப்பித்தேன். எந்தப் பதிலும் வரவில்லை. கடந்த ஜனவரி மாதம்தான் மத்திய அரசிடமிருந்து பதில் வந்தது. அதில், 'தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டம் 2009-ன் கீழ் திருமணம் பதிவு செய்திருப்பதால், இந்த நிதியைப் பெற முடியாது. நிதி உதவியைப் பெற 'இந்து திருமணப் பதிவுச் சட்டம்-1955’-ன் கீழ் பதிவுசெய்திருக்க வேண்டும்' எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து மேற்கொண்டு தகவல் தெரிந்துகொள்ள சென்னை தலைமைச் செயலகத்தையும் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கும் கடிதம் அனுப்பினேன். நேரில் சென்று சந்தித்தும் என்னுடைய புகார் குறித்து யாரும் காதுகொடுத்துகூட கேட்கவில்லை. மத்திய அரசின் நிதி கிடைத்திருந்தால் ஆட்டோ ஓட்டுநரான எனக்குப் பொருளாதாரரீதியாக பெரும் உதவியாக இருந்திருக்கும். எங்கள் திருமணத்தை இருவீட்டாரும் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. என்னுடைய கிராமத்தில் கலப்புத் திருமணம் பற்றியோ மத்திய அரசு எங்களைப் போன்றோருக்கு அளிக்கும் முன்னுரிமை பற்றியோ யாருக்கும் எதுவும் தெரியவில்லை. இந்த நிதித் தொகையைப் பெற மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பதுகூடத் தெரியாமல் தவித்துவருகிறார்கள்' என்றார் கவலையோடு. 

சிவகுமார்

வழக்கறிஞர் சிவக்குமார்

கலையரசனின் ஆதங்கம் குறித்து நம்மிடம் விவரித்த வழக்கறிஞர் சிவக்குமார், 'சமூகத்தில் உள்ள சாதிய ஏற்றத் தாழ்வுகளை நீக்குவதற்காகவும் கலப்புத் திருமணம் (சாதி மறுப்பு) செய்பவர்களை ஊக்குவிக்கவும் டாக்டர் அம்பேத்கர் சமூக ஒருமைப்பாட்டு கலப்புத் திருமண நிதி உதவித் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. 2013-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த நிதித் திட்டம், சாதி மறுப்புத் திருமணம் செய்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பொருளாதார பாதுகாப்புக்காகவும் சமூக அங்கீகாரத்துக்காகவும் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தை நிர்வகிக்கும் பொறுப்பு, மத்திய அரசின் அம்பேத்கர் ஃபவுண்டேஷனுக்கு வழங்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் நிதியைப் பெற, அரசு விதிகளின்படி தம்பதியரில் ஒருவர் தாழ்த்தப்பட்டவராக இருக்க வேண்டும். மேலும், இருவருக்கும் முதல் திருமணமாக இருக்க வேண்டும். இருவரின் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். 

மேலும், இந்து திருமணப் பதிவுச் சட்டம்-1955-ன் கீழ் திருமணத்தைப் பதிவுசெய்திருக்க வேண்டும். திருமணத்தைப் பதிவுசெய்த ஓராண்டுக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும். இந்தியாவில் பட்டியலின சமூகத்தின் மக்கள் தொகையை அடிப்படையாகவைத்து இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதன்படி, ஓராண்டுக்கு தமிழகத்திலிருந்து மட்டும் சுமார் 40 பேர் வரை இத்திட்டத்தின் கீழ் பயன் பெறுவார்கள். ஆனால், இப்படி ஒரு நிதித் திட்டம் இருப்பதே பெரும்பாலான மக்களுக்குத் தெரியவில்லை.

'இந்து திருமணப் பதிவுச் சட்டம்-1955’-ன் கீழ் பதிவுசெய்தவர்கள் மட்டுமே இந்த நிதி உதவியைப் பெற முடியும். ஆனால், தமிழகத்தை பொறுத்தவரை `தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டம், 2009’-ன் கீழ்தான் திருமணங்கள் பதிவுசெய்யப்படுகின்றன. இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர் என யாராக இருந்தாலும் தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டத்தின்கீழ்தான் பதிவு செய்வார்கள். இங்குதான் சிக்கல் தொடங்குகிறது. இந்த திருமணச் சான்றிதழை வைத்துக்கொண்டு அம்பேத்கர் சமூக ஒருமைப்பாட்டு கலப்புத் திருமண நிதி பெற விண்ணப்பித்தால், `Not Eligible' என்றே பதில் வருகிறது. எனவே, தமிழகத்தில் சாதி மறுப்புத் திருமணம் செய்யும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவரால் மத்திய அரசின் நிதியைப் பெற முடியாது. இதற்கு ஒரே தீர்வு என்னவென்றால், 'தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டம், 2009’-ன்  கீழ் பதிவாகும் சாதி மறுப்புத் திருமணங்களையும் கருத்தில்கொள்ள வேண்டும்' என்று மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். 

சாதி ஒழிய கலப்புத் திருமணங்கள்தான் அடிப்படையாக இருக்கின்றன. பொதுவாக, சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களுக்கு பொருளாதாரரீதியாக உதவிகள் கிடைப்பதில்லை. உறவினர்களும் அவர்களைப் புறக்கணிக்கின்றனர். இவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டிய கடமை அரசுகளுக்கு இருக்கிறது.

சாதி மறுப்புத் திருமணங்களைப் பொறுத்தவரை மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகம் தொடர்ந்து முன்னுரிமை அளித்துவருகிறது. தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டம் 2009-ன்கீழ் திருமணம் செய்பவர்களுக்கு வழங்கப்படும் படிவத்திலேயே மத்திய அரசு கேட்கும் அனைத்துத் தகவல்களும் அடங்கிவிடும். அதாவது, இந்து திருமண பதிவுச் சட்டம்-1955-ன் கீழ் பதிவுசெய்ய என்னென்ன தகவல் கொடுக்க வேண்டுமோ அனைத்துத் தகவல்களும் தமிழக அரசு படிவத்திலேயே குறிப்பிடப்பட்டிருக்கும். அப்படியிருக்கும்போது, மத்திய அரசு தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டத்தின் கீழ் நடக்கும் திருமணத்தை ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. இதனால், தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்த நிதி கிடைப்பதே இல்லை. இப்படியொரு நிதி இருப்பதைப் பற்றி யாருமே மக்களுக்குத் தெரியப்படுத்துவதும் இல்லை. 

சாதி மறுப்புத் திருமணத்துக்கு மத்திய அரசு நிதி அளிப்பதன்மூலம் பொருளாதாரரீதியாக மட்டும் உதவவில்லை. சாதிக்கு எதிரான ஒன்றாகத்தான் பார்க்க வேண்டும். சாதி மறுப்புத் திருமணம் செய்து, மத்திய அரசின் நலத்திட்டத்தை ஒருவர் பெறுகிறார் என்றால், அவரைச் சுற்றியுள்ள கிராம மக்களும் சாதி மறுப்புத் திருமணத்தை மத்திய அரசு அங்கீகரிக்கிறது என உணர்வார்கள். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திட்டம், மக்களைச் சென்று சேராமல் இருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது. இந்தத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு போதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க