வெளியிடப்பட்ட நேரம்: 11:20 (07/02/2018)

கடைசி தொடர்பு:11:52 (07/02/2018)

தினகரன் விரைவில் புதிய கட்சி அறிவிப்பார்; ஆனால், சேர மாட்டோம்- பொதுக்கூட்டத்தில் கலகலத்த தங்க தமிழ்ச்செல்வன்

பதவிக்காகச் சசிகலா மீது குற்றம் சுமத்திய துரோகிகளைக் கடவுள் மன்னிக்க மாட்டார் என டி.டி.வி.தினகரன் அணியின் கொள்கை பரப்புச் செயலாளரான தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.

ராமநாதபுரத்தில் நடந்த தினகரன் ஆதரவு அணி கூட்டத்தில் சசிகலா குறித்து பேசும் தங்க தமிழ்ச்செல்வன்

ராமநாதபுரத்தில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர் வ.து.ந.ஆனந்த் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் கலந்துகொண்டார். கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``எங்களது அணியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் 18 பேர் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு சாதகமாக வந்தால் பேரவைக்குச் சென்று மக்களுக்காகப் பாடுபடுவோம். அதேநேரத்தில் தீர்ப்பு பாதகமாக வந்தால் மேல்முறையீடு செய்ய மாட்டோம். அதற்குப் பதிலாக எந்தத் தேர்தல் வந்தாலும் அதில் நின்று வெற்றிபெற்றுக் காட்டுவதுடன், ஊழலற்ற நல்லாட்சியைத் தமிழக மக்களுக்குத் தருவோம்.

அ.தி.மு.க என்ற பெயரும் இரட்டை இலைச் சின்னமும் எங்களிடம் இல்லை என்பதால் விரைவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். ஆனால், உள்ளாட்சித் தேர்தல் வர வாய்ப்பில்லை. கட்சியும் சின்னமும் இல்லாத நேரத்தில் உள்ளாட்சித் தேர்தல் வந்துவிட்டால் கட்சியின் ஒவ்வொரு வேட்பாளரும் வெவ்வேறு சின்னத்தில் போட்டியிட வேண்டிய நிலை வந்துவிடும். அந்த நிலை வந்தால் வெற்றி பெற முடியாமல் போய்விடும். எனவே கழகத் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் விரைவில் புதிய கட்சியை அறிவிக்க இருக்கிறார்.

அப்புதிய கட்சியின் சார்பில் ஒரே ஒரு சின்னத்தைப் பெற்று அந்தச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். அதேநேரத்தில் நமது அணியில் உள்ள தகுதிநீக்கம் செய்யப்பட்டதாகச் சொல்லிக்கொண்டிருக்கும் 18 பேரவை உறுப்பினர்களும் புதிய கட்சியில் சேரமாட்டோம். சேர்ந்தால் பதவி போய்விடும். எனவே, 18 பேரவை உறுப்பினர்களும் தனியாக வழக்கைச் சந்தித்து வெற்றி பெறுவோம். உள்ளாட்சித் தேர்தலில் நம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற்ற பிறகு, அ.தி.மு.க-வையும் இரட்டை இலைச் சின்னத்தையும் மீட்டெடுப்போம்.

சசிகலாவுக்கு உறுதுணையாக இருந்து எந்தப் பதவியையும் அனுபவிக்காதவர்கள்தான் இன்றும் டி.டி.வி.தினகரனுடன் சேர்ந்து இருக்கிறோம். சசிகலா தொடர்ந்து 33 ஆண்டுகள் ஜெயலலிதாவுக்கு உறுதுணையாக இருந்தார். அரசியலில் எந்தப் பதவியையும் விரும்பவோ கேட்கவோ இல்லை. நட்புக்குச் சிறந்த இலக்கணமாகத் திகழ்ந்தவர் சசிகலா. ஜெயலலிதா உடல்நலம் முழுவதும் பாதிக்கப்பட்ட நிலையிலும் தேர்தல் பிரசாரத்தில் முழுமையாகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு மக்களுக்காக உழைத்துதான் ஆக வேண்டும் என்றார். அப்போலோ மருத்துவமனையில் தொடர்ந்து 75 நாள்கள் இருந்தபோது யாரும் வாய் திறக்கவில்லை. அவரது இறப்புக்குப் பிறகு, ஜெயலலிதாவை, சசிகலாதான் அடித்துக் கொன்றுவிட்டார் என்று ஓர் அப்பட்டமான பொய்யைச் சொல்லத் தொடங்கி விட்டார்கள். உண்மையில் ஜெயலலிதாவின் மரணம் இயற்கையான மரணம். பதவிக்காகத் துரோகம் செய்தவர்களைக் கடவுள் மன்னிக்கவே மாட்டார்'' என்றார்.