வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (07/02/2018)

கடைசி தொடர்பு:11:45 (07/02/2018)

பெண்போல பேசி காதலித்த வாலிபரைக் கொன்ற வழக்கில் போலீஸ்காரர் சிக்கினார்!

கல்லூரி மாணவனைக் கொலைசெய்த வழக்கில் தேடப்பட்டுவந்த காவலர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வ.புதுப்பட்டி கிருஷ்ணாம்பேட்டை பகுதியில், கடந்த மாதம் 24-ம் தேதி,  போதா குளம் கண்மாயில் அய்யனார் என்ற கல்லூரி மாணவர் படுகொலை செய்யப்பட்டுக்கிடந்தார். இந்த வழக்கில் மூன்றுபேரை கைது செய்த நிலையில், தலைமறைவான முக்கிய குற்றவாளியான போலீஸ்காரர் கண்ணனை தற்போது கைதுசெய்துள்ளனர். 

காவலர் கைது

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள கிருஷ்ணாம்பேட்டையைச் சேர்ந்த காவலர் கண்ணன், எண்ணூரில்  பணியாற்றிவந்தார். கடந்த சில மாதங்களாக, அவருடைய அலைபேசிக்கு பெண் ஒருவர் பேசிப் பேசி காதலை வளர்த்துள்ளார். அதுமட்டுமல்லாமல், அந்தப் பெண் தன்னுடைய ஊரைச்சேர்ந்தவர் என்பது தெரிந்ததும், அவரை பார்க்க கண்ணன் சென்றதாகவும், அப்போதுதான் காதலித்தது ஒரு ஆண் என்பதும் தெரிந்து, மனம் நொந்து விஷம் குடித்துள்ளார். இதற்குக் காரணம், அய்யனார் தன்னை ஏமாற்றியதுதான் என்று கண்ணன் உறவினர்களிடம் சொன்னதால், அவருடைய தம்பி விஜயகுமார், தமிழரசன் ஆகியோர் அய்யனாரை கடந்த 24-ம் தேதி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. கண்ணனும் அய்யனாரும் தெரிந்தேதான் பழகினார்கள் என்றும், அது வேறு மாதிரியான உறவு என்றும் சொல்லப்படுகிறது.

போலீஸ் விசாரித்து மூன்று பேரை கைதுசெய்துள்ள நிலையில், கடந்த 12 நாள்களாக தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான காவலர் கண்ணனை, வத்திராயிருப்பு  காவல் ஆய்வாளர் ஜஸ்டின் பிரபாகரன் தலைமையிலான தனிப்படையினர் தற்போது கைது செய்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க