ஓட்டுநரின் தூக்கக் கலக்கத்தால் கவிழ்ந்த வாகனம்! பாம்பன் பாலத்தில் தொடரும் விபத்து

பாம்பன் சாலைப் பாலத்தில், இன்று அதிகாலை மீன் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்ததால், சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.

பாம்பன் சாலை பாலத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் கவிழ்ந்த வாகனம்

ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளில் பிடிக்கப்படும் மீன்களை வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்குக் கொண்டுசெல்வதற்காக, அவற்றைப் பதப்படுத்தி வாகனங்களில் எடுத்துச்செல்வது வழக்கம். இந்தப் பணிகளில் சில தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டுவருகின்றன.  இன்று அதிகாலை, பாம்பன் பகுதி மீனவர்கள் பிடித்துவந்த மீன்களை எடுத்துச்செல்வதற்காக, மண்டபத்திலிருந்து மீன் ஏற்றிச்செல்லும் வாகனம் ஒன்று ஐஸ் கட்டிகளுடன் வந்துள்ளது. அதிகாலை 5 மணியளவில், இந்த வாகனம் பாம்பன் பாலத்தின் தொடக்கத்தில்  உள்ள வேகத்தடையைக் கடக்க முயன்றபோது, நிலைகுலைந்து பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதியதுடன், சாலையின் குறுக்கே கவிழ்ந்தது.

வாகன ஓட்டுநரின் தூக்கக் கலக்கத்தால் ஏற்பட்ட இந்த விபத்தில், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால், பாலத்தின் குறுக்காக வாகனம் கவிழ்ந்து கிடந்ததால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மீட்பு வாகனம்மூலம் சாலையின் குறுக்கே கவிழ்ந்து கிடந்த மீன் ஏற்றும் வாகனத்தை அகற்றி, அப்பகுதியில் போக்குவரத்தைச் சரிசெய்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!