`தனி மாநில அந்தஸ்துதான் எங்கள் குறிக்கோள்' - கட்சித் தொடக்க விழாவில் ரங்கசாமி முழக்கம் | We need Separate state status, says Rangasamy

வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (07/02/2018)

கடைசி தொடர்பு:14:10 (07/02/2018)

`தனி மாநில அந்தஸ்துதான் எங்கள் குறிக்கோள்' - கட்சித் தொடக்க விழாவில் ரங்கசாமி முழக்கம்

புதுச்சேரியின் பிரதான எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் 8-ம் ஆண்டு தொடக்க விழா 100 அடி சாலையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. விழாவில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி கட்சிக்கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் மற்றும் நிர்வாகிகள் என சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

அப்போது பேசிய ரங்கசாமி, “அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் பேரியக்கம் 8-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. எங்கள் கட்சி புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காகவும் மக்கள் முன்னேற்றத்துக்காகவும் கடந்த காலங்களில் பாடுபட்டது. இனி வரும் காலங்களிலும் எங்கள் நோக்கம் அதுவாகவே இருக்கும். தனி மாநில அந்தஸ்துதான் என்றுமே எங்கள் குறிக்கோள். அதேபோல மக்கள் ஒத்துழைப்புடனும் ஆசி மற்றும் துணையோடு மீண்டும் புதுச்சேரியில் ஆட்சி அமைப்போம்.

புதுச்சேரி மாநில மக்களுக்காக அரசு தக்க நேரத்தில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். யாருடன் கூட்டணி வைத்துள்ளோம் என்று அனைவருக்கும் தெரியும். பிரதமர் மோடி ஆரோவில் வரும்போது அவரை நிச்சயமாக சந்திப்பேன். மக்களுக்காக என்.ஆர்.காங்கிரஸ் என்றும் இருக்கும். தற்போது கட்சியைப் பலப்படுத்தும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறோம்” என்று தெரிவித்தார்.