மீண்டும் போராட்டத்துக்குத் தயாராகும்  நல்லாண்டார்கொல்லை! - சூடுபிடிக்கும் ஹைட்ரோ கார்பன் விவகாரம் | Nallandar kollai villagaers to organise protest against hydrocarbon project

வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (07/02/2018)

கடைசி தொடர்பு:14:30 (07/02/2018)

மீண்டும் போராட்டத்துக்குத் தயாராகும்  நல்லாண்டார்கொல்லை! - சூடுபிடிக்கும் ஹைட்ரோ கார்பன் விவகாரம்

'சுற்றுச்சூழல் அதிகாரிகளும் தமிழக அரசும் ஒப்புதல் அளித்தால், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் வேலைகளை மத்திய அரசு தொடங்கும்' என்று மத்திய பெட்ரோலிய இணை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இரண்டு தினங்களுக்கு முன்பு அறிவித்தார். அதைத் தொடர்ந்து நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை உள்ளிட்ட பகுதிகள், மீண்டும் பரபரப்புடன் காணப்படுகின்றன.

புதுக்கோட்டை மாவட்டம் நல்லாண்டார்கொல்லையில், ஓ.என்.ஜி.சி நிறுவனத்தால் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை முழுவதுமாக மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்று கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், இப்பகுதி மக்கள் பெரிய அளவில் போராட்டங்களை  நடத்தினார்கள். அப்போது, போராட்டக்குழுவினரை நேரில் சந்தித்த மாவட்ட ஆட்சியர் கணேஷ், 'அமைக்கப்பட்ட  ஆழ்குழாய்கிணறுகள் அத்தனையையும்  டிசம்பர் மாதத்துக்குள்ளாக அப்புறப்படுத்தி, நிலத்தை அந்தந்த உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்று உறுதி கூறி, அதை எழுத்துபூர்வமாகவும்  கொடுத்தார். அதனடிப்படையில்தான் நல்லண்டார்கொல்லையில் போராட்டக்குழுவினர் தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்திவைத்தனர். மாவட்ட ஆட்சியர் கூறியபடி, இதுநாள்வரை ஆழ்குழாய்க்கிணறுகள் மூடப்படவில்லை. அதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் அரசு தரப்பிலிருந்தும் மேற் கொள்ளப்படவில்லை.

எனவே, இன்று (7-2-2018) மாலை  நல்லண்டார்கொல்லையில் பொதுமக்கள் ஒன்றுகூடி, ஓ.என்.ஜி.சி-யால் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணற்றை   மூடுவதற்கான போராட்டத்தை நடத்துவதற்கான முடிவுசெய்வதுகுறித்து கூட்டம் நடத்த இருக்கிறார்கள். இதுபற்றி நல்லண்டார்கொல்லை ஹைட்ரோ கார்பன் திட்டம் எதிர்ப்புப் போராட்டக் குழுவினர்  கூறும்போது, 'பிப்ரவரி 15-ம் தேதியுடன் ஹைட்ரோ கார்பன் திட்டம் அறிவிக்கப்பட்டு ஒரு வருடம் நிறைவடைகிறது. அதைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி, குடும்பம் குடும்பமாக நாங்கள் போராட்டம் நடத்தினோம். மாவட்ட ஆட்சியரும்  எழுத்துபூர்வமாக எங்களுக்கு  உத்தரவாதம் அளித்தார். ஆனால்,
இதுநாள் வரை தமிழக அரசும்  மத்திய அரசும் மாவட்ட  நிர்வாகமும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அத்துடன், மத்திய பெட்ரோலியத்துறை இணை அமைச்சர் தர்மேந்திர பிரதானும் இங்கு ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தைச் செயல்படுத்தப்படும் என்ற ரீதியில் பேசியிருக்கிறார். இந்தச் சூழலில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்துசெய்ய வலியுறுத்தி,
பொதுமக்கள் போராட்டத்தை மீண்டும் கூர்மைப்படுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே, இன்று மாலை 
நெடுவாசல் நல்லண்டார்கொல்லையில் அதுபற்றிய கூட்டம் நடத்தி, முக்கிய முடிவுகளை எடுக்க இருக்கின்றோம்' என்றார்கள்.