வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (07/02/2018)

கடைசி தொடர்பு:14:50 (07/02/2018)

`அபாயக் குறியீடுகள் மறைப்பு' - பூச்சிக்கொல்லி மருந்தால் பறிபோகும் உயிர்கள்

`பருத்தி வயலில் பூச்சிக்கொல்லியைத் தெளித்து உயிரிழந்த விவசாயிகளுக்கு, பூச்சிக்கொல்லி நிறுவனங்களே இழப்பீடு வழங்க வேண்டும். நிவாரணம் கொடுக்கவில்லையென்றால், நிறுவனங்களுக்குக் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்' என்று கொந்தளிக்கிறார்கள் தேசியக் கூட்டமைப்பினர்.

பூச்சிக்கொல்லி விஷத்தைப் பருத்தி வயலில் தெளித்தபோது, அதன் வீரியம் தாங்க முடியாமல் கூத்தூரைச் சேர்ந்த ராமலிங்கம், சித்தளி ராஜா, ஒதியத்தைச் சேர்ந்த செல்வம் மற்றும் பசும்பலூரைச் சேர்ந்த அர்ஜுனன், தேவேந்திரன் என 5 விவசாயிகள், அரியலூரில் ராமன், திருப்பதி, லோகநாதன் என்ற 3 விவசாயிகள். சேலத்தில் சுரேஷ் குமார் இதுவரையிலும் 9 பேர் இறந்திருக்கிறார்கள். இன்று வரையிலும், 300-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

                                           
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்திலிருந்து, பூச்சிக்கொல்லிக்கு எதிரான தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நரசிம்ம ரெட்டி, பெரம்பலூர் மாவட்டத்தில் பூச்சிக்கொல்லி பாதிப்புகளைக் கண்டறிய வேப்பூர் பகுதி விவசாயிகளுடன் கலந்துரையாடினார். பூச்சிக்கொல்லிகளின் தீமைகள் இந்திய அளவில் நடந்துவரும் பாதிப்புகள் குறித்து விரிவாக விவசாயிகளிடம் எடுத்துக்கூறினார்.

பின்பு, குன்னம் பகுதிகளில் பூச்சிக்கொல்லி தாக்கத்தால் மருத்துவமனைக்குச் சென்று உயிர்பிழைத்த பருத்தி விவசாயிகளின் வீடுகளுக்குச் சென்று பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். பின்பு பூச்சிக்கொல்லி இல்லாமல் பயிரிடப்படும் நாட்டுப் பருத்தி விளைச்சலையும் பார்வையிட்ட பின்பு பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். பூச்சிக்கொல்லி பாதிப்பால் இறந்தவர்களுக்கு இதுவரை எவ்வித நஷ்ட ஈடும் வழங்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. பாதிப்பு அடைந்தவர்களுக்கும் தேவையான மருத்துவ உதவியும் பொருள் உதவியும் வழங்கப்பட வேண்டும். ஆனால், இவர்கள் செய்யவில்லை. பூச்சிக்கொல்லி டப்பாக்களில் உள்ள மேல் உரைகளில், பூச்சிக்கொல்லி குறித்து சரியான தகவல்கள் இல்லாமல் தவறான தகவல்கள் இருக்கின்றன. மிகவும் கொடிய மோனோ குரோடபாஸ் எனும் பூச்சிக்கொல்லி, 'அபாயம்’ என சில நிறுவனங்களால், குறிக்கப்பட்டு சிவப்பு நிறத்தில் உள்ள குறியீடுகள், சில பூச்சிக்கொல்லி டப்பாக்களில் மஞ்சள் நிறத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

பல பூச்சிக்கொல்லி டப்பாக்களில், படித்து புரிந்துகொள்ள இயலாத வகையில் மிகச்சிறிய எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. இதே போன்று பல நிறுவனங்கள் தமிழ் மொழியில் குறிக்காமல், வேறு மொழியில் குறிக்கப்பட்டுள்ளது. பூச்சிக்கொல்லி அடிக்கும் எவரிடமும் முறையான பாதுகாப்பு உடையில்லை. உயிர் காக்கக்கூடிய சிகிச்சை வழங்கபடவில்லை. பூச்சிக்கொல்லி பாதிப்பால் இறந்தவர்களுக்கு இழப்பீடு சம்பந்தப்பட்ட பூச்சிக்கொல்லி நிறுவனங்கள் வழங்க வேண்டும். நிவாரணம் கொடுக்காத நிறுவனம் மீது கடுமையான தண்டனை வழங்க வேண்டும். பூச்சிக்கொல்லியைப் படிப்படியாகக் குறைத்து, தடை செய்ய வேண்டும்'' என்று முடித்தார்.