இந்தியாவுக்கு கடத்த இருந்த 3.25 கிலோ தங்கம் இலங்கையில் பறிமுதல்! | Sri Lankan Navy seized 3.25 kg Smuggling gold

வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (07/02/2018)

கடைசி தொடர்பு:15:40 (07/02/2018)

இந்தியாவுக்கு கடத்த இருந்த 3.25 கிலோ தங்கம் இலங்கையில் பறிமுதல்!

 இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு கடல் மார்க்கமாகக் கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்புள்ள 3.25 கிலோ தங்கத்தை இலங்கைக் கடற்படையினர் இன்று (7.2.2018) பறிமுதல் செய்தனர்.

இலங்கையில் கடற்படையினரால் பிடிபட்ட தங்கம்
  

இலங்கை கடற்கரைப் பகுதிகளிலிருந்து ராமேஸ்வரம் உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்டக் கடற்கரைப் பகுதிகளுக்கு கடல் மார்க்கமாகத் தங்கக் கட்டிகள் கடத்தப்படுவது தொடர் நிகழ்வுகளாக நடந்து வருகிறது. இதேபோல் இங்குள்ள கடற்கரைப் பகுதிகள் வழியாக இலங்கைக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களைக் கடத்திச்செல்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

கடந்த வாரத்தில் இலங்கைக்குப் போதைப்பொருள் மற்றும் பீடிக் கட்டுகளைக் கடத்திச் சென்ற ராமேஸ்வரத்தைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் 2 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர். இதேபோல் இலங்கையில் இருந்து தங்கக் கட்டிகள் கடத்த முயன்ற இலங்கையைச் சேர்ந்த 2 பேர் அந்நாட்டு கடற்கரைப் பகுதியில் தங்கக் கட்டிகளுடன் பிடிபட்டனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை காங்கேசன்துறை கடற்பகுதியில் ரோந்து சென்ற இலங்கைக் கடற்படையினர் அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்ற படகைச் சோதனையிட்டனர். இந்தச் சோதனையின்போது, அந்தப் படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3.25 கிலோ எடை கொண்ட தங்கக் கட்டிகள் பிடிபட்டன. இதையடுத்து, அந்தப் படகில் இருந்த இலங்கையைச் சேர்ந்த 2 பேரைச் சிறைபிடித்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் 1 கோடி ரூபாய் எனத் தெரிகிறது.