' நாங்களும் அரசாங்கத்தை நடத்த வேண்டும்!' - விவசாயிகள் கேள்வியால் கொதித்த ஓ.பன்னீர்செல்வம் | We have to run the government, OPS hits back at farmers

வெளியிடப்பட்ட நேரம்: 15:12 (07/02/2018)

கடைசி தொடர்பு:15:12 (07/02/2018)

' நாங்களும் அரசாங்கத்தை நடத்த வேண்டும்!' - விவசாயிகள் கேள்வியால் கொதித்த ஓ.பன்னீர்செல்வம்

பன்னீர்செல்வம்

மிழக துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை நேற்று சந்தித்துப் பேசியுள்ளனர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். ' துணை முதல்வர் சொந்தத் தொகுதியிலேயே ஐந்தாயிரம் விவசாயிகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. உள்ளாட்சித்துறை நிர்வாகத்தின் அதிகப்படியான வரி விதிப்பைப் பற்றியும் பன்னீர்செல்வத்திடம் முறையிட்டோம்' என்கின்றனர் விவசாயிகள். 

தேனி மாவட்ட வனப் பகுதிகளில் பயிரிட்டு வாழும் ஐந்தாயிரம் விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தில் இருந்து கடந்த வாரம் நோட்டீஸ் ஒன்று சென்றுள்ளது. அந்த நோட்டீஸில், ' நீங்கள் எல்லாம் ஆக்ரமிப்பாளர்கள். உடனே வெளியேற வேண்டும்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இப்படியொரு நோட்டீஸை எதிர்பார்க்காத விவசாயிகள் மத்தியில் திடீரென பதற்றம் எழுந்தது. இதனையடுத்து, ' வன உயிரின சட்டத்துக்கு விரோதமாக அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர்' எனக் கூறி, நேற்று கண்டன பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தன விவசாய சங்கங்கள். கூட்டம் தொடங்குவதற்கு முன்பு, ' துணை முதல்வர் தேனியில் இருக்கிறார். அவரை வந்து பாருங்கள்' என விவசாயிகளுக்கு அழைப்பு வந்துள்ளது.

பெ.சண்முகம்இதுகுறித்து நம்மிடம் விவரித்தார் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம். " மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை அதிகாரிகளின் விரோதப் போக்கைக் கண்டித்துத்தான் கூட்டம் நடத்த முடிவு செய்திருந்தோம். தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் விடுதிக்கு நேற்று துணை முதல்வர் வந்திருந்தார். இரவு ஒன்பது மணியளவில் நானும் தேனி மாவட்ட விவசாயிகள் சங்க செயலாளர் கண்ணனும் அவரைச் சந்தித்தோம். அவரிடம் பேசும்போது, ' பழைய வனப் பாதுகாப்புச் சட்டம் 1980-ன் அடிப்படையில் அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியிருக்கிறார்கள். இந்த சட்டத்துக்கு நேர் எதிரான சட்டம்தான் வன உரிமைச் சட்டம் 2006 என்பது. வனத்தில் பயிர் செய்யக் கூடிய விவசாயிகளுக்கு உரிமை கோரக் கூடிய சட்டம் இது. இந்தச் சட்டத்தையே கணக்கில் காட்டாமல் பழைய சட்டப்படி அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியிருக்கிறார்கள். இது சட்டவிரோதமான செயல்பாடு. பட்டா கொடுப்பதற்கான நடவடிக்கைகளில்தான் அரசு இறங்க வேண்டும். தமிழ்நாட்டில் வேறு எந்த இடத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கவில்லை' என துணை முதல்வரிடம் தெரிவித்தோம். 

இதற்குப் பதில் அளித்து எங்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ' நாளை வனத்துறை அமைச்சரும் வருகிறார். அவருடன் சென்று விவசாயிகளை நேரடியாக சந்தித்துப் பேசுகிறோம். பதற்றப்பட வேண்டாம் என விவசாயிகளிடம் சொல்லுங்கள்' என்றார். இதன்பின்னர், ' உள்ளாட்சி நிர்வாகத்தில் அதிகப்படியான வரியை உயர்த்தப்பட்டிருக்கிறது. வீட்டு வரி, பிறப்பு, இறப்பு சான்றிதழ் உள்பட அனைத்திலும் வரியை உயர்த்திவிட்டீர்களே?' எனக் கேட்டோம். இதனை எதிர்பார்க்காத துணை முதல்வர், ' தமிழ்நாட்டில் வரியை உயர்த்தி பத்து வருடங்கள் ஆகின்றன. உள்ளாட்சி நிர்வாகம் நடக்க வேண்டாமா? இப்படியெல்லாம் நீங்கள் சொல்லலாமா?' எனக் கேட்டார்.

உடனே நாங்களும், ' வரியை சிறிது சிறிதாக உயர்த்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். 150 சதவீதம், 200 சதவீதம் என ஒரேயடியாக உயர்த்துவது நியாயம்தானா...மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். பிறப்பு சான்றிதழுக்கு முன்பெல்லாம் 50 ரூபாய் கொடுத்து வந்தோம். இப்போது 200 ரூபாயாக உயர்த்திவிட்டீர்கள். வீட்டு வரியையும் அதிகப்படியாக உயர்த்திவிட்டீர்கள். வரியைக் குறைக்க வேண்டும்' என வலியுறுத்தினோம். ' ஒரேயடியாகக் குறைக்க முடியாது. அரசு நிர்வாகம் நடக்க வேண்டும். எந்தெந்த வகைகளில் குறைக்க முடியும் என ஆலோசிக்கிறோம்' என்றார் துணை முதல்வர். இதன்பிறகு, போடி பகுதியில் நீண்டகாலமாக பட்டா இல்லாமல் அவதிப்படும் அட்டவணைப் பிரிவு மக்கள் குறித்து தெரிவித்தோம். இதற்கு பதில் அளித்தவர், ' என்னுடைய தொகுதியில் நடக்கும் இதுபோன்ற விஷயங்கள்கூட கவனத்துக்கு வருவதில்லை' என குறைபட்டுக் கொண்டவர், உடனே மாவட்ட கலெக்டரைத் தொடர்பு கொண்டு பேசினார். ' விரைவில் என்னுடைய கையாலேயே பட்டா வழங்குகிறேன்' எனவும் உறுதியளித்தார்" என்றவர், 

" போடி வனப்பகுதியில் பயிர் செய்து வாழும் பரம்பரை விவசாயிகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும் என்பதை துணை முதல்வரிடம் வலியுறுத்தி இருக்கிறோம். அதிகாரிகளின் சட்டவிரோதமான செயல்பாடு குறித்தும் அவரிடம் விரிவாகத் தெரிவித்திருக்கிறோம். இதையும் மீறி, ஆக்ரமிப்பு என்று கூறி விவசாயிகளை அகற்றும் முயற்சிகள் நடந்தால், தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுப்போம்" என்றார் உறுதியாக. 
 


டிரெண்டிங் @ விகடன்