`கோயில் நிர்வாகம் கைவிட்டால் எங்களின் நிலை என்னாகுமோ?' - புதுமண்டப வியாபாரிகள் கண்ணீர் | Fire in Madurai Meenakshi temple - Shop keepers request to government

வெளியிடப்பட்ட நேரம்: 22:45 (07/02/2018)

கடைசி தொடர்பு:22:45 (07/02/2018)

`கோயில் நிர்வாகம் கைவிட்டால் எங்களின் நிலை என்னாகுமோ?' - புதுமண்டப வியாபாரிகள் கண்ணீர்

புதுமண்டபம்

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கடந்த 2-ம் தேதி இரவு தீ விபத்து ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த நிலையில், மாவட்ட உயர் அதிகாரிகள் அனைவரும் அன்று இரவு முழுவதும் அங்கிருந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோதும் பொதுமக்கள் அனைவரும் கோயில் நிர்வாகத்தின்மீது கோபத்தை வெளிப்படுத்தினர். கோயில் இணை ஆணையர் கோயிலுக்கு வருமானம் சேர்க்கும் பணியை மட்டும் செய்தார் எனக் குற்றம் சாட்டினர். அதைப்போலவே மாவட்ட ஆட்சியரும் பாதுகாப்பில் முன்னேற்றங்களைக் கொடுக்கவில்லை என தனது அறிக்கையும் கொடுத்தார். இப்படி பல பிரச்னைகள் உள்ள நிலையில் கோயில் வெளியே உள்ள புதுமண்டபத்தில் கடைகளை நடத்திவரும் வியாபாரிகள் நிலை கேள்விக்குறியாக உள்ளதாக மாவட்ட  ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

அதில், ``நாங்கள் 120 ஆண்டுகளுக்கும் மேல் புதுமண்டபத்தில் தொழில் செய்கிறோம். இந்தத் தொழிலை நம்பி நேரடியா 1,500 தொழிலாளர்கள் குடும்பங்கள் வாழ்கின்றன. இந்நிலையில் கோயிலில் தீ பற்றிய காரணத்தால் 5 நாள்களாகக் கடை அடைக்கப்பட்டுள்ளது. மீண்டும் திறக்க முடியுமா என்ற அச்சத்தில் உள்ளோம். எனவே, எங்கள் குடும்ப வாழ்வாதாரத்துக்கு வழிவிடும் வகையில் கடைகளைத் திறக்க அனுமதி அளிக்கும் விதமாகக் கடைகள் திறக்கவிட்டு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்'' எனக் கேட்டுக்கொண்டனர். ''மாவட்ட நிர்வாகமும் கோயில் நிர்வாகமும் கை விரித்துவிட்டால் எங்களின் நிலை என்ன ஆகும் என்றே தெரியவில்லை'' எனக் கண்ணீர் மல்கக் கூறினர்.