வெளியிடப்பட்ட நேரம்: 17:35 (07/02/2018)

கடைசி தொடர்பு:17:35 (07/02/2018)

`டெல்லியில் பேசி இந்தப் பிரச்னை உடனே தீர்க்கப்படும்' - ஓ.பன்னீர்செல்வம்

தேனி மாவட்டம், அகமலைப் பகுதியில் இன்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் மக்கள் வளர்ச்சிப் பணிகள் குறித்து நேரடி ஆய்வு நடத்தினர். அகமலையில் கண்ணக்கரை முதல் மருதையனூர் வரையிலான 9.3 கிலோ மீட்டர் தார்ச்சாலை போடுவதற்கான அனுமதி வனத்துறையால் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேரடியாகக் கண்ணக்கரைக்கு வந்த வனத்துறை அமைச்சர் மற்றும் துணை முதல்வர், அப்பகுதி மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனர். உடன் வந்திருந்த வனத்துறை, வருவாய்துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், "கண்ணக்கரை முதல் மருதையனூர் வரையிலான சாலைக்கு 6.7 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 2.2 கிலோ மீட்டருக்கு வனத்துறையின் அனுமதி பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள 7.1 கிலோ மீட்டருக்கு அனுமதி பெற வேண்டும். அந்த நடவடிக்கை குறித்து ஆய்வு செய்யப்படும்" என்றார். மேலும், ராமக்கல் மெட்டு மற்றும் சாக்கலுத்து மெட்டு பகுதிகளில் சாலை மூலமாக எளிமையாகக் கேரளாவுக்குச் செல்லலாம். இதற்காக 2013-ம் ஆண்டு ஆய்வு செய்யப்பட்டது. தற்போது வனத்துறை அமைச்சர் வந்திருக்கிறார்.

தற்போது அங்கே சென்று ஆய்வு செய்ய இருக்கிறோம். மேகமலையைச் சுற்றுலாத்தளமாக மாற்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆசைப்பட்டார். அதற்காக நிதியும் ஒதுக்கப்பட்டது. தற்போது ஒரு கட்டமாகச் சாலை போடப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாகச் சாலைப்பணிகள் இரண்டு மூன்று மாதங்களில் தொடங்கப்படும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையிலே வனத்துறையினர் அகமலைவாசிகளை வெளியேறச் சொல்கிறார்கள். டெல்லியில் பேசி இந்தப் பிரச்னை உடனே தீர்க்கப்படும்" என்றார்.

தர்மயுத்தம் தொடங்கி ஓர் ஆண்டு நிறைவடைந்தது தொடர்பாகப் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "எனது தர்மயுத்தம் 100 சதவிகிதம் வெற்றியடைந்துவிட்டது" என்றார் புன்னகையோடு. பின்னர், சோத்துப்பாறை வாகன நிறுத்தம், ஊரடி ஊத்துக்காடு பிரிவில், கரும்பாறை பகுதி மக்களின் குறைகளை ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சீனிவாசன், மாவட்டக் கலெக்டர், எம்.எல்.ஏ ஜக்கையன் ஆகியோர்  கேட்டறிந்தனர். அப்போது, 'விரைவில் தீர்வு காணப்படும்' என உறுதியளித்தனர்.