ஜல்லிக்கட்டுப் போராட்ட லத்தி சார்ஜில் பார்வையிழந்த கார்த்தி..! நீதிக்குப் போராடும் குடும்பம் | A boy who lost his vision in jallikattu protest

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (07/02/2018)

கடைசி தொடர்பு:19:00 (07/02/2018)

ஜல்லிக்கட்டுப் போராட்ட லத்தி சார்ஜில் பார்வையிழந்த கார்த்தி..! நீதிக்குப் போராடும் குடும்பம்

ஜனவரி 23, 2017 அன்று, மெரினாவில் ஜல்லிக்கட்டுக்காகப் போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது. அறவழியில் தொடங்கிய போராட்டம், காவல் துறையின் தலையீட்டால் வன்முறைக் களமாக மாறியது. நடுக்குப்பம் மீன் மார்க்கெட், தீக்கிரையாக்கப்பட்டது. மீனவக் குப்பங்கள் மட்டுமன்றி அந்தப் பகுதியைச் சுற்றியிருந்த மக்களின் குடியிருப்புகளும் சூறையாடப்பட்டன. கலங்கரைவிளக்கம் புறநகர் ரயில்நிலையத்தின் அருகில் பக்கிங்ஹாம் கால்வாயின் கரையில் இருக்கிறது கார்த்தியின் வீடு. கார்த்திக்கு 16 வயது. ``துப்பாக்கித் சத்தம் கேட்டுதுனு வெளில வந்து பார்த்தேன். `என்ன பாக்குற..?'னு போலீஸ்காரங்க லத்தி வெச்சு ஓங்கி அடிச்சுட்டாங்க. இடதுகண்ணுல பட்டு, மயங்கி விழுந்துட்டேன்” அன்று நடந்ததை விவரிக்கிறார்.

ஜல்லிக்கட்டு

ரத்த வெள்ளத்தில் கிடந்த கார்த்தியை, அவரது தாய் விமலாவும் அண்ணன் விஜய்பாபுவும் எழும்பூர் கண் மருத்துவமனைக்குத் தூக்கிக்கொண்டு ஓடினர். ``எந்த டெஸ்டும் எடுக்கலை; பார்த்தவுடனே சொல்லிட்டாங்க. `ஒரு கண்ணுல பார்வை போயிருச்சு'னு” என்றார் கார்த்தியின் தாய் விமலா.

ஓராண்டு கழிந்தது. அன்றைய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதுபோல, வாடிவாசலில் ஜல்லிக்கட்டுக் காளைகள் துள்ளிக்கொண்டு ஓடியதை நாமெல்லாம் கண்டுகளித்தோம். அலங்காநல்லூரில் காளைகள் துள்ளுவதற்காக, ரோட்டரி நகரில் கண் பார்வையைப் பறிகொடுத்த கார்த்தி எப்படி இருக்கிறார் என்பதை அறிய, தேடிச் சென்றேன்.

``ஆறு மாசமா வீட்டுக்குள்ளயே முடங்கியிருந்தான். எங்கேயும் போகலை. இப்போதான் கொஞ்சம் சகஜமா நடமாடுறான்” என்று ஆரம்பித்தார் விமலா.

``வெளியில போனா பார்க்கிறவங்க எல்லாரும் `என்ன ஆச்சு?'னு கேக்குறாங்க. கஷ்டமா இருந்துச்சு. அதனாலதான் போகலை” என்கிறார் கார்த்தி.

கார்த்தியின் தந்தை முனுசாமி, சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இருபது ஆண்டுகளுக்கு முன்னர், தலையில் ஏற்பட்ட விபத்தால் அவருக்கு இப்படி ஆகிவிட்டதாகக் கூறுகின்றனர். கடந்த ஆண்டு தன் மகனுக்குக் கண்பார்வை பறிபோனதை அறிந்த அவர், திடீரென காணாமல்போய்விட்டார். குடும்பத்தினரும் நண்பர்களும் அவரைத் தேடியலைந்து கண்டுபிடித்து மீட்டனர். முன்பைவிட, இப்போது அவருக்கு மனநலம் இன்னும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்கின்றனர் குடும்பத்தினர்.

ஜல்லிக்கட்டு

கார்த்திக்கு படிப்பில் ஆர்வம் இல்லை என அவரே கூறுகிறார். இந்த நிகழ்வுக்கு முன்னரே, தன் வீட்டின் முன்பு சைக்கிள் ரிப்பேர் செய்யும் கடை வைத்து நடத்திவந்திருக்கிறார். கடந்த சில மாதங்களாக மீண்டும் பணியைத் தொடங்கியிருக்கிறார் கார்த்தி. குடும்பத்தின் தேவைகளுக்காக, கார்த்தியின் தாய் விமலாவும், அண்ணன் விஜய்பாபுவும் துப்புரவுப் பணியாளர்களாக உழைக்கின்றனர்.

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் காவல் துறையின் கொடூரமான தாக்குதலால் ஒரு கண்ணில் பார்வையிழந்த சிறுவனைப் பற்றிய செய்திகள் அப்போது பரவின. மாணவர்களும் தன்னார்வலர்களும் தங்களால் இயன்ற உதவிகளை, கார்த்தியின் குடும்பத்துக்குச் செய்தனர். எனினும், `கார்த்தியின் இடதுகண்ணில் பார்வை வராது!' என, பரிசோதித்த அனைத்து மருத்துவர்களும் தெரிவித்துவிட்டதாக கார்த்தியின் அண்ணன் விஜய்பாபு கூறுகிறார்.

``நீதியரசர் ராஜேஷ்வரன் தலைமையில் நடந்த விசாரணைக் கமிஷனில் ஆஜராகி, என் தம்பிக்கு நடந்த கொடுமையைச் சொல்லப் போனோம். அப்போ அங்க வந்த போலீஸ்காரங்க எங்ககிட்ட `பணம் தர்றோம். வழக்கு எதுவும் போட வேண்டாம்'னு கேட்டுக்கிட்டாங்க. அதுக்கு நாங்க ஒத்துக்கலை. வழக்குப் போட்டிருக்கோம். ஆனா, அரசு தரப்புல வாய்தா மேல வாய்தா வாங்கிகிட்டே இருக்காங்க” என்றார்.

``இந்த இடதுகண்ணுல பார்வையில்லனு தெரியாத மாதிரி அழகுப்படுத்திட்டாகூட போதும்” என்கிறார் கார்த்தி.

``என் மகனுக்கு நிரந்தரமா பார்வையில்லாம பண்ணின அரசாங்கம், நிச்சயமா பதில் சொல்லியே ஆகணும். எங்களுக்கு நீதி வேணும்!” என அழுகிறார் விமலா.

தமிழ்க் கலாசாரம், காளையை அடக்குவதில் மட்டுமல்ல... எளிய மனிதர்களுக்குச் சரியான நீதியை வழங்குவதிலும் அடங்கியிருக்கிறது. வாடிவாசல் திறந்தவுடன், தங்கள் வீட்டுக் காளைகள் சீறிப்பாய்ந்ததைக் கொண்டாடி மகிழ்ந்த ஆட்சியாளர்கள், இதை உணர வேண்டும்.

-


டிரெண்டிங் @ விகடன்