அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் இரவு விசிட்! கிண்டலடித்த பொதுமக்கள்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சமீப காலமாகத் தன்னுடைய திருமங்கலம் தொகுதியைச் சுற்றிச் சுற்றி வருகிறார். ஒவ்வொரு கிராமமாக மக்கள் குறைகேட்பு முகாம் நடத்துவதாகக் கூறி இரவுபகல் பாராமல் கிராமங்களுக்குள் உலா வருகிறார். அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர், தாசில்தார் உட்பட அனைத்துத் துறை அதிகாரிகளும் பின்னால் சென்று கொண்டிருக்கின்றனர். 

தொகுதிக்குள்


மக்கள் குறைகேட்பு முகாம் மாலை 4 மணிக்குத் தொடங்குவதாகக் கூறிவிட்டு இரவு 9 மணிக்கு அமைச்சர் வருவதால், பெரும்பாலான கிராமங்களில் மக்கள் அங்கேயே உறங்கி, அமைச்சர் வந்ததும் தூக்க கலக்கத்தில் மனு கொடுத்துவிட்டு நள்ளிரவில் வீட்டுக்குச் செல்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தாங்களும் நேரத்தோடு வீட்டுக்குப் போகமுடியவில்லை என்று அதிகாரிகள் புலம்பித் தள்ளுகிறார்கள். ''நாங்கள் ஏற்கெனவே கொடுத்த பல மனுக்களுக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. இப்ப என்னடான்னா, நடுச்சாமத்துல வந்து அமைச்சர் மனு வாங்குகிறார். என்ன காரணம்னு தெரியலை, தேர்தல் ஏதும் வரப்போகுதா'' என்று கிண்டலடிக்கிறார்கள் மக்கள். இதுமட்டுமல்லாமல் தொகுதிக்குள் எந்த வீட்டிலாவது சுப நிகழ்ச்சி என்றாலும் துக்க நிகழ்வு என்றாலும் அவர்கள் வீட்டுக்குச் சென்று நிதியுதவி அளித்தும் அசத்துகிறார்.

''தொகுதியில் தீர்க்கப்படாத பிரச்னைகளைக் கண்டுகொள்ளாமல் இருந்தவர், வெற்றி பெற்ற பிறகு, எப்போதாவது தொகுதிக்குள் எட்டிப் பார்த்தவர், தற்போது இரவு நேரங்களிலும் சுற்றி வருவதற்கு காரணம் விரைவில் தேர்தல் வரவிருப்பதுதான்'' என்று கட்சியினரே கூறுகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!