'பெட்ரோல் விலை உயர்வால் அம்மா ஸ்கூட்டர் திட்டம் பாதிக்கும்' - வருந்தும் அதிமுக எம்.எல்.ஏ

மதுரை முல்லை நகரில் புதிதாக அங்கன்வாடி கட்டடம் ஒன்றைத் திறந்துவைத்த மதுரை வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ ராஜன்செல்லப்பா செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர், “உலகச் சந்தையில் பெட்ரோல், டீசலின் மூலப்பொருள் குறைவாக இருந்தாலும் அதை வாங்கி பெட்ரோல் டீசலாக வழங்கும் மத்திய அரசு மிக அதிக அளவு விற்பனை செய்கிறது. தற்போது 40 சதவிகிதம் வரை பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. இதற்கு எந்தக் கட்சியும் ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. தி.மு.க-கூட இதை எதிர்க்கவில்லை. மத்திய அரசை மட்டும் எதிர்க்கிறது.

மத்திய அரசின் நல்ல திட்டங்களுக்குத் தமிழக அரசு ஆதரவாக இருந்தாலும் இது போன்ற விஷயங்களில் மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவிக்க முடியாது. இதற்கு கண்டிப்பாகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவிப்போம். இந்தப் போராட்டத்துக்கு ஓ.பி.எஸ், இ.பி.எஸ் ஆதரவு வழங்கி தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்துவார்கள். பெட்ரோல், டீசல் விலை கூடுவதற்கு தற்போது ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறேன் தெரியுமா. அம்மா மானிய ஸ்கூட்டரை தமிழக அரசு வழங்க உள்ளது. எரிபொருள்களின் விலையை உயர்த்திவிட்டால் பெண்கள் யாரும் வாகனங்களைப் பயன்படுத்த மாட்டார்கள். அம்மாவின் திட்டம் நிறைவேறாமல் போய்விடும் எனும் காரணத்துக்காகத்தான் தற்போது எதிர்க்கிறேன். பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து ஸ்கூட்டரில் பயணமாகச் சென்று அடையாளப் போராட்டம்கூட நடத்த தயாராக இருக்கிறோம். அதை வரும் 10-ம் தேதி மதுரை புறநகர் ஆய்வுக் கூட்டத்தில் கலந்து பேசிய பின் முடிவெடுப்போம்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!