வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (07/02/2018)

கடைசி தொடர்பு:22:30 (07/02/2018)

கணபதியைக் காவலில் எடுத்து விசாரித்தால் இரண்டு பேர் சிக்குவார்கள்! ராமதாஸ்

கிருஷ்ணகிரி மாவட்ட பா.ம.க நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார்.

ராமதாஸ் பேட்டி

அப்போது அவர், தமிழக சட்டப்பேரவையில் இன்னும் 5 நாள்களில் இந்த ஆண்டின் பட்ஜெட் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. 2018 மற்றும் 2019-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருவதாகத் தகவல் வெளியாகிறது. இப்படி செய்வதற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. காரணம் அரசுப் பெரும்பான்மையை இழந்து 6 மாதங்கள் ஆகிறது. சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி இந்த அரசு தப்பிப் பிழைத்து வருகிறது. தற்போதைய கணக்குபடி தமிழக சட்டசபையில் உள்ள 234 உறுப்பினர்களில், ஆட்சி அமைக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால் தற்போது எடப்பாடி பழனிசாமி அரசுக்கு 111 பேரின் ஆதரவு மட்டுமே உள்ளது. 122 பேர் இந்த அரசுக்கு எதிராக உள்ளனர்.

இதைக் கணக்கிட்டு தமிழக ஆளுநரிடம் மனு கொடுத்து உடனடியாக இந்த அரசை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என வலியுறுத்தினோம். ஆளுநர் ஓர் ஆணையிட்டிருந்தால் இந்த ஆட்சி அன்றே கவிழ்ந்திருக்கும். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் வழக்கில் அரசுக்கு எதிராகத் தீர்ப்பு வரும். அப்படி வந்தால் எடப்பாடி ஆட்சி கவிழும். உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி அரசு மேல் முறையீடு செய்யும். அப்படிச் செய்தால் மரபு, தார்மீக நெறிகளின்படி தவறானதாகும். எடப்பாடி பழனிசாமி அரசின் செயலை உயர் நீதிமன்றம் ஏற்காது. எனவே, உயர் நீதிமன்றம் தீர்ப்பு வரும் வரை தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யக் கூடாது.

இந்த ஆண்டின் இறுதியில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேச மாநிலச் சட்டசபைத் தேர்தல்கள் வருகிறது. அத்துடன் பாராளுமன்றத் தேர்தலும் வரவாய்ப்பு உள்ளது. அப்போது தமிழக சட்டசபைத் தேர்தல் வர அதிக வாய்ப்புகள் உள்ளது. ஊழல் வழக்கில், பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கணபதி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். கணபதியிடம் தீவிரமாக விசாரணை நடத்தினால் ஆளுங்கட்சி முன்னாள் அமைச்சர் பழனியப்பன், இன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் பற்றிய விவரங்கள் தெரியவரும். எனவே, அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும். கல்வியில் ஊழல் செய்யும் இவர்களைத் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

ரயில்வே துறை பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு மிகக் குறைந்த அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பக்கத்து மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்துக்குக் குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3,198 கிலோ மீட்டர் தூரம் ரெயில்வே பாதை அமைப்பது உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்ற ரூ.20,064 கோடி நிதி தேவை. ஆனால், அதில் 10-ல் ஒரு பங்கு நிதி மட்டுமே ஒதுக்கியுள்ளனர். இதே நிலை நீடித்தால் தமிழ்நாட்டுக்கு ரயில்வே திட்டங்கள் கிடைக்க 20 ஆண்டுகள் ஆகும். இதற்கு அ.தி.மு.க பாராளுமன்ற உறுப்பினர்கள் 50 பேரும் தமிழகத்துக்குத் திட்டங்களைப் பெற பாராளுமன்றத்தில் அழுத்தமான குரல் கொடுக்க வேண்டும்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க