மாணவர்களின் வகுப்பைத் தரையில் அமர்ந்து கவனித்த மாவட்ட ஆட்சியர்

அரசுத் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு, 9-ம் வகுப்பு மாணவிகள் இருவர் பாடம் எடுத்தனர். அதை மாவட்ட ஆட்சியர் மாணவர்களுடன் தரையில் அமர்ந்து கவனித்தார். 

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வேங்கிக்கால் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து (தி பாத் கேளாபல் பப்ளிக் பள்ளி)  வருகின்ற மாணவிகள் பூஜா, வைஷ்ணவி ஆகிய இருவரும் கல்வியின் முக்கியத்துவம், சுற்றுச்சூழலை பராமரிப்பது, தூய்மை, புத்தக வாசிப்பு குறித்து பிற மாணவர்களுக்கு விழிப்பு உணர்வு பாடம் நடத்தினார்கள். இந்த வகுப்பறையில் மாணவர்களோடு சேர்ந்து மாவட்ட ஆட்சியர் க.அ.கந்தசாமி  மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் ஆகியோரும் வகுப்பைக் கவனித்தனர். 

மாணவிகள் தங்களை அறிமுகப்படுத்திய பின் சிங்கத்தின் கதையைக் கூறி வகுப்பை ஆரம்பித்தனர். கைக்கழுவும்  பழக்கத்தின்  அவசியத்தையும் பள்ளி வளாகம், வீடு, சுற்றுச்சூழலை எப்படி நாம் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும் என்பதையும் அறிவுறுத்தினர்.     
பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு அதிகரித்துவிட்ட நிலையில் வீடுகளிலிருந்து மக்கும் மற்றும் மக்காதக் குப்பைகளை எப்படிப் பிரிப்பது குறித்த செயல் விளக்கங்களையும் அளித்தனர். மேலும் மக்கும் குப்பைகளைப் பயன்படுத்தி எவ்வாறு செடிகள், மரங்கள் வளர்க்கலாம் என்பதையும் மாணவிகள் கூறினர். நாளிதழ்கள், வார இதழ்களில் மாணவர்கள் தங்கள் திறமைகளைக் காட்ட வேண்டும்.

ஓவியங்களை வரைந்து நாளிதழ்களுக்கு அனுப்ப வேண்டும். நீங்கள் வரைந்த ஓவியம் உங்களின் பெயரோடு சேர்ந்து வெளியாகும்போது, நம்பிக்கை தானாகப் பெருகிவிடும் என்று மாணவர்களுக்கு வலியுறுத்தினர். இருவரும் பாடல் ஒன்றைப் பாடி மாணவர்களை உற்சாகப்படுத்திய பின், இறுதியாக அனைத்து மாணவர்களும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 

இதுகுறித்து தெரிவித்த மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, 'எனது அலுவலகத்துக்கு வந்தக் கடிதங்களில் வைஷ்ணவி மற்றும் பூஜா ஆகியோர் அனுப்பியக் கடிதம் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இந்த இளம் வயதில் சமூகத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்ற இவர்களின் எண்ணம் வியக்கத்தக்கது. இவர்களை உலகுக்கு அடையாளம் காட்ட வேண்டும்  என்பதற்காகவே இப்பள்ளிக்கு அழைத்து வந்து பாடம் நடத்தச் செய்தோம் என்றார்.

மாணவிகள் பூஜா மற்றும் வைஷ்ணவி  கூறுகையில், 'அப்துல் கலாமின் கனவு, 2020-ல் இந்தியா வல்லரசாக வேண்டும் என்பதுதான். இன்னும் இரண்டு ஆண்டுகளே உள்ள நிலையில் மாணவர்கள் நினைத்தால் அந்தக் கனவை நிஜமாக்க முடியும். இந்தியாவின் முன்னேற்றத்துக்கு மாணவர்களின் பங்கு முக்கியமானது. 

 எங்களது ஆசை மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவது. நாங்கள் அனுப்பியக் கடிதத்தை  மாவட்ட ஆட்சியர்  படிப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இந்த வாய்ப்பை கொடுத்த ஆட்சியர், பெற்றோர், ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி' என்று தெரிவித்தனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!