வெளியிடப்பட்ட நேரம்: 21:38 (07/02/2018)

கடைசி தொடர்பு:21:38 (07/02/2018)

மருத்துவ மாணவர் சரத் பிரபுவின் உடற்கூராய்வு அறிக்கையில் உண்மைத்தன்மை இல்லை - தந்தை குற்றச்சாட்டு

டெல்லியில் உள்ள யுனிவர்சிட்டி காலேஜ் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவக் கல்லூரியில் உயர்கல்வி பொது மருத்துவம் படித்து வந்த சரத் பிரபு என்ற தமிழக மாணவர், கடந்த ஜனவரி மாதம் அவரது விடுதி அறையில் மர்ம மரணமடைந்தார். அதனைத்தொடர்ந்து டெல்லியில் உடற்கூராய்வு செய்யப்பட்டு, சரத் பிரபுவின் உடல் அவரது சொந்த ஊரான திருப்பூரில் அடக்கம் செய்யப்பட்டது. 

தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாகிய சரத் பிரபுவின் மர்ம மரணத்தைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளும், பொதுநல ஆர்வலர்களும் அவரது குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். இந்நிலையில் சரத் பிரபுவின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகவும், விடுதியில் சரத் பிரபு இறந்து கிடந்தபோது, அவரின் தலையில் வெட்டுக் காயமும், கழுத்திலும் கையிலும் தடித்தடியான தழும்புகள் இருந்ததாகவும் அவரது தந்தை செல்வமணி தெரிவித்ததோடு, அதற்கான புகைப்பட ஆதாரங்களையும் வெளியிட்டார்.

இது சரத் பிரபுவின் மரணத்தில் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. சரத் பிரபுவின் மரணம் தொடர்பாக டெல்லி காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வரும் நிலையில், சரத் பிரபுவின் உடற்கூராய்வு அறிக்கை அவர்களின் வழக்கறிஞர்களிடம் வழங்கப்பட்டது. இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய சரத் பிரபுவின் தந்தை செல்வமணி, 'என் மகனின் உடற்கூராய்வு அறிக்கை, டெல்லியில் உள்ள எங்களது வழக்குரைஞர்களுக்குக் கிடைத்திருக்கிறது. அதில் உண்மைக்குப் புறம்பானத் தகவல்கள் இருப்பதாகவும், குறிப்பாக அவனது உடலில் இருந்த காயங்கள் தொடர்பாக எந்தவித தகவல்களும் அதில் இடம்பெறவில்லை என்று  வழக்கறிஞர் தெரிவித்தார். இதுதொடர்பாக மருத்துவமனை தரப்பில் விசாரித்துவிட்டு மேற்படி தகவல்கள் தெரிவிப்பதாகவும் வழக்குரைஞர் கூறியிருக்கிறார்' என்று தெரிவித்தார்.