வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (07/02/2018)

கடைசி தொடர்பு:23:00 (07/02/2018)

திட்டமிட்டப்படி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும்..! மின்சாரவாரிய ஊழியர்கள் அறிவிப்பு

மின்சார ஊழியர்கள் போராட்டம் திட்டமிட்டபடி பிப்ரவரி 16-ம் தேதி நடைபெறும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. 

மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பதில் கால தாமதம் ஏற்படுகிறது என்றுகூறி வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடப்போவதாக சி.ஐ.டி.யு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன. அதனையடுத்து, கடந்த மாதம் 22-ம் தேதி தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் தொழிற்சங்கங்களுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடந்தது.

அந்தக் கூட்டத்தில், பிப்ரவரி 12-ம் தேதி ஊதிய உயர்வு தொடர்பான ஒப்பந்தம் முடிவு செய்யப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தாமல், மின்சார வாரிய ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து, வரும் 16-ம் தேதி ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்ய 10 சங்கங்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது.

இந்தநிலையில், தொழிற்சங்கங்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனத் தெரிவித்த தொழிற்சங்கங்கள் திட்டமிட்டபடி 16-ம் தேதி வேலை நிறுத்தம் நடத்தப்படும் எனத் தெரிவித்தனர்.