கொள்ளையடிக்கப்படும் இயற்கை வளம்: பச்சைத் தமிழகம் குற்றச்சாட்டு!

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள மலைப் பகுதியில் இயற்கை வளம் கொள்ளையடிக்கப்படுவதாக பச்சைத் தமிழகம் கட்சி குற்றம்சாட்டியுள்ளது

இயற்கை வளம் கொள்ளை

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி, குருசடி பகுதியில் உள்ள தெற்கு மலையடிவாரத்திலிருந்து கடந்த சில தினங்களாக மண் எடுக்கப்பட்டு நூற்றுக்கணக்கான லாரிகளில் கொண்டு செல்லப்பட்டு வந்தது. அந்தப் பகுதி வழியாக ஏராளமான லாரிகள் வேகமாகச் சென்று வந்ததால் விபத்து ஏற்படும் ஆபத்து உருவானது. இதனால் அதிருப்தியடைந்த தேவசகாயம் மவுன்ட் பொதுமக்கள், லாரிகளை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பொதுமக்களின் திடீர் மறியலால் அந்த வழியாக வந்த ஏராளமான லாரிகள் சிறைப்பிடிக்கப்பட்டன. இதைப்பற்றி அறிந்து அந்தப் பகுதிக்கு வந்த ஆரல்வாய்மொழி காவல் ஆய்வாளர் ஜெயலெட்சுமி, தோவாளை வட்டாட்சியர் சுரேஷ்குமார், மண்டல துணை வட்டாட்சியர் முருகன் ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில், அந்தப் பகுதியில் தொடர்ந்து மண் எடுக்கப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து லாரிகள் விடுவிக்கப்பட்டன. 

மலையடிவாரத்தில் மண் எடுக்கும் பகுதிக்குச் சென்ற பச்சைத் தமிழகம் கட்சியின் மாநிலத் தலைவரான சுப.உதயகுமாரன் அந்த இடத்தை பார்வையிட்டார். இதைப்பற்றி பேசிய அவர், ’’அளவுக்கு அதிகமாக மண் எடுக்கும் காரணத்தால் இயற்கை வளம் பாதிக்கப்படுகிறது. அதனால் இந்தப் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறையும் ஆபத்து உருவாகியிருக்கிறது. 40 அடி ஆழத்துக்குப் பள்ளம் தோண்டி மண் கொள்ளை நடந்துள்ளது. இதனால் நீர்பிடிப்புப் பகுதிகள் பாதிக்கப்படும்’’ என்றார். 

மண் கொள்ளை

இதைப்பற்றி பேசிய பச்சைத் தமிழகம் கட்சியின் குமரி மாவட்டத் தலைவரான சங்கரபாண்டியன், ’’மலையடிவாரத்தில் ஆழமாக மண் எடுக்கப்படுவதால் மழை பெய்யும்போது மலைப் பகுதியிலிருந்து வரக்கூடிய தண்ணீர் ஆங்காங்கே தேங்கும். அதனால் அருகிலுள்ள குளங்களுக்குத் தண்ணீர் செல்லாததால் குளங்கள் வறண்டுவிடும் ஆபத்துள்ளது. இந்தப் பிரச்னை வருங்கால தலைமுறைக்குப் பெரும் சவாலாக மாறும் என்பதால் பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள்’’ என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!