கோவில்பட்டி நகராட்சியைக் கண்டித்து முருகனிடம் மனு அளித்த த.மா.க.வினர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியினர் முருகக் கடவுளிடம் மனு கொடுத்து தேங்காய் விடலை போடும் நூதனப் போராட்டத்தை நடத்தினர்.

கோவில்பட்டி நகராட்சியில் புதிய மற்றும் பழைய கட்டடங்களுக்கு வரி விதிப்பு மற்றும் சீராய்வு என்ற பெயரில் நகராட்சி நிர்வாகம் கட்டாய வரி வசூல் செய்து வருதைக் கண்டித்து கோவில்பட்டி நகரத் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் முருக கடவுளிடம் மனு அளிக்கும் போராட்டத்தில்  ஈடுபட்டனர்.  

இது குறித்து த.மா.கா நகரத் தலைவர் ராஜகோபாலிடம் பேசினோம்,  ”கோவில்பட்டி நகராட்சியில் புதிய மற்றும் பழைய கட்டடங்களுக்கு வரி விதிப்பு மற்றும் சீராய்வு என்ற பெயரில் நகராட்சி நிர்வாகம் கட்டாய வரி வசூல் செய்து வருகிறது. இதுகுறித்து அரசிடமிருந்து எந்த விதமான அரசாணையும் வழங்கப்படாத நிலையில், மக்களிடம் பேரம் பேசி அதிகாரிகள் துன்புறுத்தி வருகின்றனர்.

 2 வருடத்தில் முடிக்கப்படுவதாகக் கூறிய கோவில்பட்டி 2-வது கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிகளைக் கடந்த 8 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் செய்து வருகிறது நகராட்சி நிர்வாகம். எனவே இந்த 2-வது குடிநீர் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். 2 வது குடிநீர் திட்டத்தினை காரணம் காட்டி நகரில் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க வேண்டும். அண்ணா பஸ் நிலையத்தில் பயணிகள் நிழற்குடை மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி த.மா.க சார்பில் இதுவரை பல போராட்டங்களை நடத்தி மனு அளித்துள்ளோம்.

ஆனால், இதற்காக நகராட்சி நிர்வாகத்திடமிருந்து எந்த வித பதிலோ, நடவடிக்கையோ இல்லை. இதனைக் கண்டித்தும், இனி கடவுள்தான் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் முருகக் கடவுளிடம் வேண்டி மனு அளித்துள்ளோம்.” என்றார்.   

கோவில்பட்டி, மார்க்கெட் அருகிலுள்ள சக்தி விநாயக சுப்பிரமணியசுவாமி கோவிலில் முருகப் பெருமானிடம் மனு அளித்தனர். தொடர்ந்து, தங்கள் கோரிக்கை நிறைவேற வேண்டிகோவில் முன்பு தேங்காய் விடலை போட்டும் கோஷங்களை எழுப்பினர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!