வெளியிடப்பட்ட நேரம்: 02:42 (08/02/2018)

கடைசி தொடர்பு:02:42 (08/02/2018)

தமிழர்களைக் கழுத்தை அறுத்துவிடுவேன் என்று சைகை காட்டியவரை நாடு கடத்த வேண்டும் - வைகோ ஆவேசம்

லண்டனில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழர்களைப் பார்த்து சைகை மூலம் ”கழுத்தை அறுப்பேன்” எனத் தெரிவித்த இலங்கை பிரிகேடியரை நாடு கடத்திட இந்திய அரசு குரல் கொடுக்க வேண்டும்” என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தனது உதவியாளர் சந்துருவின் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்டபின், செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, 'சிங்கள இனவாத கொலைகார இலங்கை அரசு குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும். லட்சக்கணக்கானத் தமிழர்களின் படுகொலைக்கு நீதி கேட்டும் உலக அரங்கில் பல்வேறு குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி உள்ள இந்த நேரத்தில், பிரிட்டிஷ்காரர்கள் சிங்கள அரசிடம் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைத்து விட்டு இலங்கைக்குச் சுதந்திரம் வழங்கிய நாள் பிப்ரவரி 4.

அந்தத் தினமான பிப்ரவரி 4-ம் தேதி, இனப்படுகொலைக்கு நீதி கேட்டு இலங்கைத் தூதரகத்தற்கு எதிரே லண்டனில், அங்கு வாழக்கூடிய ஈழத்தமிழர்கள் அமைதியான ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது இலங்கைத் தூதுவரோடு வெளியே வந்த பிரிகேடியர் என்பவர், ஆர்ப்பாட்டம் நடத்திக்கொண்டிருந்தத் தமிழர்களைப் பார்த்து,”கழுத்தை அறுப்பேன்” என கைகளால் சைகை மூலம் தெரிவித்துள்ளார்.

பிரிகேடியரின் இச்செயலுக்குப் பிரிட்டிஷ் பார்லிமென்டில் எம்.பி.,க்கள் கண்டனம் தெரிவித்து அவரது விசாவை பறிமுதல் செய்து நாடு கடத்த வேண்டும் எனப் பிரச்னையைக் கிளப்பியுள்ளனர். லண்டனில் உள்ள எம்.பி-க்கள் குரல் கொடுத்துள்ளது தமிழர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது. தமிழர்களை மிரட்டிய பிரிகேடியரை லண்டனிலிருந்து வெளியேற்ற வேண்டும் என இந்திய அரசும் குரல் கொடுக்க வேண்டும்.

மோடி அரசு எல்லா விதத்திலும் சிங்கள அரசுக்கு உதவியாக இருந்து வருகிறது. நம்முடைய மீனவர்கள் கடல் எல்லையைத் தாண்டினால் அவர்களிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய் அபாரதம் வசூலிக்கப்படும் எனவும்,  3 ஆண்டுகள் சிறை தண்டனை எனவும் இலங்கை அரசு சட்டம் நிறைவேற்றியுள்ளது. இதையும் இந்திய அரசு கண்டித்துத் தடுக்கவில்லை. இலங்கை அரசிற்கு மோடி அரசு துணைபோகிறதா? என்ற சந்தேகம் தோன்றுகிறது' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க