ஜோக்கர் படத்தை விஞ்சிய கழிப்பறை மோசடி... இது கோவை சோகம்!

கோவை, ஆனைகட்டி அருகே இருக்கிறது ஆலமரமேடு என்கிற மலைகிராமம். அங்கு ஏராளமான பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். புதிய இந்தியாவிலும் கூட, அந்தப் பகுதியில் கழிவறை வசதிகள் கூட இல்லை. இந்நிலையில், புதிய இந்தியா திட்டத்தின் கீழ், கழிவறை கட்டுவதற்கான பணிகள், கடந்த மாதம் ஏப்ரல் மாதம் தொடங்கியது.

கழிப்பறை மோசடி

இதற்காக, கடந்த ஆகஸ்ட் மாதம், இரண்டு தவணையின் கீழ் 12,000 ரூபாய் அந்த மக்களின் வங்கிக் கணக்கில் மானியம் செலுத்தப்பட்டுள்ளது. எப்படியும், தங்களுக்கு கழிவறை வந்துவிடும் என்று நம்பிக்கையோடு இருந்த அந்த மக்களுக்கு பணத்தாசை பிடித்தவர்களால் பேரதிர்ச்சி கொடுக்கப்பட்டது. மக்களின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை எடுத்து, கான்ட்ராக்டர் முதல், ஆலமரமேடு பஞ்சாயத்து அலுவலகத்தில் உள்ள கிளர்க்வரை அதில் பங்குபோட்டு கொள்ளையடித்துள்ளனர்.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பொன்னம்மாள் கூறுகையில், "கான்ட்ரக்டர் ஈஸ்வரன் கேட்னால, நாங்க கையெழுத்துப் போட்டு கொடுத்தோம். கழிவறை கட்டித்தரேன்னு சொன்னதாலதான், கையெழுத்துப்போட்டு, ரேஷன்கார்டு, ஆதார் கார்டுல கொடுத்தோம். இப்பவரை கழிவறை கட்டிக் கொடுக்கல. ஆனா, எங்க வங்கிக் கணக்குல இருந்து பணம் மட்டும் எடுத்துருக்காங்க. போன் பண்ணாலும், இப்போ வரேன், அப்போ வரேன்னு சொல்றாங்க. ஆனா, வந்தபாடில்ல" என்றார் வேதனை கலந்த குரலில்.

இந்த மோசடியைப் பொறுத்தவரை, கான்ட்ராக்டர் ஈஸ்வரன், பஞ்சாயத்து ஆபிஸ் கிளர்க் பிரகாஷ் என்று பங்குபோட்டவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. கிட்டத்தட்ட 5 லட்ச ரூபாய் பணத்தை மக்களின் வங்கிக் கணக்கில் இருந்து இவர்கள் எடுத்துள்ளனர். மக்களின் வங்கிக் கணக்கில் இருந்து, ஈஸ்வரன் பணம் எடுத்ததற்கான ஆதாரங்களும் தெளிவாக உள்ளன.

கழிப்பறை மோசடி

அதேபோல, கழிவறைக்கு மானியம் பெற ஜோக்கர் படத்தைவிட கேவலமான முறை கையாளப்பட்டுள்ளது. அதிலாவது, ஒரு கழிவறையை கட்டி, அதைவைத்து, அனைவருக்கும் கணக்கு காட்டுவார்கள். ஆனால், ஆலமரமேட்டைப் பொறுத்தவரை, ஒரு கழிவறை கூட முழுமையாக கட்டிமுடியவில்லை. கழிவறையின், பின் பகுதியில் இருந்து போட்டோ எடுத்து, மானியத்துக்கு விண்ணப்பித்துள்ளனர். மேலும், தற்போதுவரை மக்களின் உழைப்பால் மட்டும அந்த கட்டடங்கள் உருவாகியுள்ளன.

இதுகுறித்து கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ ஆறுக்குட்டியிடம் கேட்டபோது, "இப்படி ஒரு மோசடி நடந்ததே இப்பத்தான் தெரியும். பழங்குடி மக்கள் வாழ்க்கைல விளையாடக்கூடாது. தப்புப் பண்ணவங்க மேல கண்டிப்பா நடவடிக்கை எடுப்போம்" என்றார்.

கடந்த சில மாதங்களுக்கு கோவை வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், காந்திபுரம் பகுதியில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து ஆய்வு செய்தார். ஆனால், அவர் ஆய்வு செய்ய வேண்டிய இடம் ஆலமரமேடுதான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!