தற்செயல் விடுப்புப் போராட்டம்..! திருப்பூரில் 300-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு

வருவாய்த்துறையில் காலியாக உள்ள 10 ஆயிரத்துக்கும் அதிகமான பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறை ஊழியர்கள் 2 நாள்கள் தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

காவல் துறையைப் போலவே, வருவாய்த்துறை அலுவலர்களுக்கும் அரசு விடுமுறை நாள்களில் பணி செய்யும்போது, கூடுதல் பணிநேர மதிப்பு ஊதியம் வழங்க வேண்டும். 21 மாத ஊதியக்குழு நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஏற்கெனவே, வட்டாட்சியர்களுக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு ஊதியம் ஆயிரத்தை, மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை உடனடியாக ரத்துசெய்துவிட்டு, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தற்போதுள்ள மக்கள் தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப, புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

வருவாய்த்துறையில் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். வருவாய்த்துறையில் நேரடியாக துணை வட்டாட்சியர்களை நியமனம்செய்யக் கூடாது என்பவை உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏற்கெனவே மாவட்ட அளவில் உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டம் போன்றவை நடத்தப்பட்டன. தற்போதுவரை அந்தக் கோரிக்கைகள் நிறைவேறுவது குறித்து எந்தவொரு அரசாணையும் பிறப்பிக்கப்படாததால், நேற்று மற்றும் இன்றைய தினங்களில் தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் அறிவித்துள்ளார். 

அதனடிப்படையில், திருப்பூர் மாவட்டத்தில் பணியாற்றிவரும் 315 வருவாய்த்துறை அலுவலர்கள், இந்தத் தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் பங்கேற்றிருக்கிறார்கள். இதனால், அரசுப் பணிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!