காரைக்குடியில் துப்புரவுத் தொழிலாளர்கள் வெறும் கையால் கழிவுகளை அள்ளும் அவலம்..!

காரைக்குடி நகராட்சி நிர்வாகத்தை ஒழுங்காகக் கவனிக்காத நகராட்சி ஆணையர்மீது, நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் திருஞானம், புகார் மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது...

'காரைக்குடி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. அதில், 14-வது வார்டில் உள்ள குப்பைகளை அகற்றுவது, கால்வாய்களைச் சுத்தம்செய்வது போன்ற நற்பணிகளைத் தனியார் நிறுவனமான மதுரை மீனாட்சி என்ற நிறுவனத்திடம் டெண்டர் முறையில் அனுமதிக்கபட்டுள்ளது. தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு, முறையான பாதுகாப்புச் சாதனங்களை வழங்குவதில்லை. சாக்கடையைச் சுத்தம்செய்வதற்கு மதுரை மீனாட்சி நிறுவனத்திடம் போதுமான உபகரணங்கள் இல்லை. தனியார் நிறுவனத்திடம் போதுமான அளவு தொழிலாளர்கள் இல்லை போன்ற காரணங்களால், பல இடங்களில் குப்பைகளை அகற்றுவதில் காலதாமதம் ஏற்படுகின்றது. இதனால், அந்தப் பகுதியில் தொற்றுநோய் உண்டாகும் சூழ்நிலை உருவாகிறது. பலமுறை புகார் தெரிவித்தும், தனியார் நிறுவனத்தின்மீது காரைக்குடி நகராட்சி ஆணையர் எந்த ஒரு நடவடிக்கையும்  எடுக்காமல் இருப்பது ஏன் என்ற சந்தேகம் மக்களிடத்தில் உள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, ஒரு மனிதன் கையால் மலத்தை அள்ளுவது மிகவும் கொடுமையானது.

இந்தச் செயலைத் தடுக்கத் தவறியும் கண்டுகொள்ளாமலும் இருக்கும் அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது. நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த காரைக்குடி நகராட்சி ஆணையர்மீது, நகராட்சியின் நிர்வாக ஆணையர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!