சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை..! விழுப்புரம் நீதிமன்றம்

புதுச்சேரியைச் சேர்ந்த சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், வாலிபருக்கு ஆயுள் தண்டனை வழங்கியதோடு, பாதிக்கப்பட்ட சிறுமியின் கல்விச் செலவுக்கு இழப்பீட்டுத் தொகையாக, 3 லட்ச ரூபாய் வழங்க வேண்டுமென சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் நாவற்குளத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணியின் மகன், சந்திரமோகன். 38 வயதான இவர், கூலித் தொழிலாளி. இவருக்கும் புதுச்சேரி கோரிமேடு பகுதியைச் சேர்ந்த சங்கீதா என்ற பெண்ணுக்கும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தொடர்பு இருந்துவந்துள்ளது. சங்கீதாவுக்கு ஏற்கெனவே திருமணமாகி 10 வயது மகள் இருக்கிறாள். கோரிமேடு அருகே உள்ள நாவற்குளத்தில், பாட்டி தங்கம்மாள் வீட்டில் தங்கி, அரசு நடுநிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்துவந்தார் அந்தச் சிறுமி. இதனிடையே, சந்திரமோகன் கடந்த 1.12.2016 அன்று நாவற்குளத்திற்குச் சென்று, வீட்டில் தனியாக இருந்த சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சில நாள்களுக்குப் பிறகு, உடல் நிலை சரியில்லாததால் சங்கீதாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் பெற்றோர். அப்போது அவள்  வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பதை அறிந்து அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர் டாக்டர்கள். அதன்பிறகுதான், நடந்த சம்பவங்களைச் சிறுமி கூறியுள்ளார். அதுகுறித்து கோட்டகுப்பம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வழக்குப்பதிவு செய்த போலீஸார், சந்திரமோகனைக் கைதுசெய்தனர். 

இந்த வழக்கு விசாரணை, விழுப்புரம் அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடந்துவந்தது. வழக்கு விசாரணை முடிந்து, நீதிபதி ஜூலியட்புஷ்பா நேற்று தீர்ப்பளித்தார். அதன்படி, குற்றவாளி சந்திரமோகனுக்கு ஆயுள் தண்டனையும், 1 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அதேபோல, பாதிக்கப்பட்ட சிறுமியின் கல்வி மற்றும் விடுதியில் தங்கும் செலவுக்காகத் தமிழக அரசு ரூ.3 லட்சம் இழப்பீட்டுப் பணத்தை சிறுமிக்கு வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மாவட்ட இலவச சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் இந்த நிதியை கல்விச் செலவுக்கு வழங்குமாறும் உத்தரவில் கூறியுள்ளார். சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சந்திரமோகன், போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!