வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (08/02/2018)

கடைசி தொடர்பு:09:18 (08/02/2018)

கொத்தடிமைகள் விவகாரம்..! கந்தர்வக்கோட்டை வட்டாட்சியர் விளக்கம்

'கந்தர்வகோட்டைப் பகுதியில் கொத்தடிமைகள் மீட்கப்பட்டதாக வந்த தகவல் தவறு. இங்கு, கொத்தடிமைகளாக யாரும் இல்லை' என்று  கந்தர்வகோட்டை வட்டாச்சியர் பொன்மொழி கூறினார். இதனால், கடந்த இரண்டு நாள்களாக நீடித்த பரபரப்பு முடிவுக்குவந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள விராலிப்பட்டிக் கிராமத்தில் உள்ள கரும்புத் தோட்டங்களில், கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் கொத்தடிமைகளாக வேலைசெய்துவருவதாகவும் அவர்களை அதிகாரிகள் மீட்டதாகவும் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

சமூக வளைதளங்களிலும் இந்தத் தகவல் மிக வேகமாகப் பரவி, கொத்தடிமைகளுக்கு ஆதரவாக பலரும் குரல் எழுப்பத் தொடங்கி விட்டனர். ஆனால், விசாரணை மேற்கொண்ட வட்டாட்சியர், எந்தச் சமூக  நெருக்கடிகளுக்கும் ஆளாகாமல், நிதானமாக இந்த விவகாரத்தை விசாரித்ததால்,  தனி நபர்களோ, கரும்புத் தோட்டங்களின் உரிமையாளர்களோ அந்த தோட்டத் தொழிலாளர்களைப் பணியமர்த்தவில்லை என்ற உண்மை தெரியவந்தது. மாறாக, அந்தப் பகுதியில் உள்ள சர்க்கரை ஆலை நிர்வாகம்தான் இவர்களைத் தினக்கூலிகளாக வேலைக்குக் கொண்டுவந்தது என்ற உண்மையும் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், நேற்று (07.02.2018) கரும்புத் தோட்டத் தொழிலாளர்களையும் சம்பந்தப்பட்ட கரும்பு ஆலை அதிகாரிகளையும் கந்தர்வகோட்டை வட்டாச்சியர் பொன்மொழி , அவரது அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொண்டார். நாள் முழுவதும் நீடித்த இந்த விசாரணையில், யாரும் இங்கு கொத்தடிமைகளாக வேலை செய்யவில்லை. தொழிலாளர்கள், சொந்த விருப்பத்தின் பேரிலே அங்கு பணிபுரிவதும் அவர்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்பட்டுவருவதும் தெரியவந்தது. 
இதுகுறித்து வட்டாச்சியர்  பொன்மொழி கூறுகையில், 'விராலிப்பட்டிப் பகுதியில் நேற்றைக்கு முந்தைய நாள் (06.02.2018) ஆய்வு மேற்கொண்டோம். அப்போது அங்கு பண்ருட்டி

பகுதியைச் சேர்ந்த 42 பேர் குடும்பங்களுடன் வந்து புதுக்கோட்டை சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் சில மாதங்கள் தங்கி கரும்பு வெட்டும் வேலையில் ஈடுபட்டுவருவது தெரியவந்தது. ஆனால், அவர்கள் தினக்கூலி அடிப்படையில் பணிபுரிவதால், அது கொத்தடிமை சட்டத்தில் வராது. அந்தத் தொழிலாளர்களும் 'எங்களுடைய சொந்த விருப்பத்தின் பேரிலேயே இந்த வேலையைச் செய்வதாக தங்களை யாரும் அடிமையாக நடத்தவில்லை' என்றும் என்னிடம் கூறினார்கள். அதனால், அவர்கள் விருப்பபடியே விட்டுவிட்டோம். ஆனால், யாரும் அவர்களை இனிமேல் கொடுமைப்படுத்தினாலோ, ஊதியம் கொடுப்பதில் முறைகேடு செய்தாலோ தகவல் சொல்லுமாறு கூறி அனுப்பியிருக்கிறோம். அவர்களுடன் இருந்த குழந்தைகள் பலகீனமாக இருந்ததால், சார்ஆட்சியரின் உத்தரவின்படி, அவர்களுக்குத் தேவையன மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு, மீண்டும் அவர்கள் வசிக்கும் இடத்தில் பாதுகாப்பாகக் கொண்டுசென்று விட்டுவந்தோம்' என்று தெரிவித்தார்.