விவேகானந்தர் நினைவு மண்டபத்தை முறையாகப் பராமரிக்க  உத்தரவு !

மதுரையைச் சேர்ந்த கருப்பையா என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார். மனுவில், 'ராமேஸ்வரம் குந்துகல் பகுதியில், கடந்த 2009-ல் விவேகானந்தர் நினைவுமண்டபம் கட்டப்பட்டது. தற்போது, மக்கள் அதைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்துக்கு தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் வருகின்றனர். அவர்களுக்கு குடிநீர் வழங்க இந்தியன் வங்கி சார்பில் 1.50 லட்சம் செலவில் தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரமும், மாவட்ட நிர்வாகம் சார்பில் கழிப்பறையும் கட்டப்பட்டன.

மண்டபத்துக்கு வரும் பார்வையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இருப்பினும் மண்டபத்தில் அடிப்படை வசதிகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. தற்போது தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதடைந்துள்ளது. கழிப்பறையும் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. கட்டடங்களிலும் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தக் குறைபாடுகளைச் சரி செய்யக்கோரி மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, ராமேஸ்வரம் விவேகானந்தர் நினைவுமண்டபத்தை முறையாகப் பராமரிக்க உத்தரவிட வேண்டும்' என மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு, இது தொடர்பாக ராமநாதபுரம் சுற்றுலா வளர்ச்சி அலுவலர் 4 வாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு, மனுவை முடித்துவைத்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!