வெளியிடப்பட்ட நேரம்: 09:59 (08/02/2018)

கடைசி தொடர்பு:11:06 (08/02/2018)

``உண்மையில் தேர்வுக் காலம் ஆசிரியர்களுக்கும் ஸ்ட்ரெஸ் கொடுக்கும்!” மாணவர் - ஆசிரியர் உறவு விரிசலுக்கான அலசல்

ஆசிரியர்

ஆசிரியருடன் உண்டான உறவு என்பது மாணவரின் வாழ்நாள் முழுவதும் தொடந்துவருவது என்றுதான் கூறப்படுகிறது. சமீபத்தில் திருப்பத்தூரில் தலைமை ஆசிரியரை, ஒரு மாணவன் கத்தியால் குத்தியதும், கரூர் அருகே ஆசிரியர் ஒருவர், மாணவனைக் கத்தியால் குத்திய செய்தியையும் படிக்கும்போது பெரும் அதிர்ச்சிக்குள்ளாகிறோம். வழிகாட்டியாக, பின் தொடர்பவராகவும் இருக்க வேண்டிய அற்புத உறவில் எங்கு விரிசல் வந்தது. உடலில் வன்முறையைப் பிரயோகிக்கிற அளவுக்கான நிலைமை எப்படி வந்தது, இவற்றுக்குத் தீர்வுதான் என்ன என்கிற கேள்விகள் எழுந்த வண்ணமிருக்கின்றன. இது குறித்து, குழந்தைகளுக்கு மனவளப் பயிற்சி அளிக்கும் கீர்த்தன்யாவிடம் பேசினோம்.

கீர்த்தன்யா

"இந்த வன்முறை சம்பவங்களைப் பார்க்கும்போது வெடிக்கக் காத்திருக்கும் வெடிகுண்டின் நிலையில் இந்தப் பிரச்னை இருப்பதாகத் தோன்றுகிறது. நான் ஏராளமான அரசுப் பள்ளிகளுக்குச் சென்றிருக்கிறேன். சொல்வதற்கு வருத்தமாகத்தான் இருக்கிறது, ஆனாலும், மறைப்பதில் பலனில்லை. திறமை வாய்ந்த ஆசிரியர்கள் இருப்பதைப்போலவே, பணிபுரியும் ஆசிரியர்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியினர் அதற்கான முழுத் தகுதியோடு இல்லை. அதனால் மாணவர்கள் கேட்கும் கேள்விகளைச் சரியான முறையில் எதிர்கொள்ள முடிவதில்லை. அதனால் ஏதேனும் சொல்லி மாணவர்களை உட்காரச் செய்யவே நினைக்கின்றனர். 

டீன் ஏஜ் வயதிலுள்ளவர்களின் மூளை ஒரு நாளைக்கு 10 மணி நேரம் தூங்குவதுதான் ஆரோக்கியமானது என அறிவியல் கூறுகிறது. எட்டு மணி நேரத்துக்கு அரைமணி நேரம் குறைவாகத் தூங்கினாலும் முடிவெடுக்கும் திறன் மந்தமாவதற்கு வாய்ப்புகள் அதிகம். தற்போது 10 -ம் வகுப்புக்கு வந்ததுமே படிப்பைத் தவிர வேறெந்த விஷயத்திலும் அவர்களின் கவனம் சென்றுவிடக் கூடாது என்று ஆசிரியர்கள், பெற்றோர்கள் நினைக்கின்றனர். விடியற்காலை நான்கு மணிக்கு எழுப்பிவிட்டு, ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனி டியூசன், பள்ளிக்குச் செல்வது என அவர்கள் உறங்கச்செல்லும் இரவு பத்து மணி வரை படிப்பு, படிப்பு மட்டுமே. இது ஒரு வகையில் மன அழுத்ததை மாணவருக்குத் தருகிறது என்றால், இன்னும் சில பெற்றோர் தங்கள் வேலைக்கு விடுப்பு எடுத்து, பாடம் சொல்லிக்கொடுக்கின்றனர். அந்த அதீத கவனிப்பின் பலனை பெற்றோர் எதிர்பார்ப்பார்களே என்கிற அச்சம் பேரளவு மன அழுத்தத்தைத் தருகிறது. 

இவற்றுக்குத் தீர்வாக, நான் நினைப்பது, போதுமான நேரம் மாணவர்கள் உறங்கவிட வேண்டும். கலை சார்ந்த விஷயங்களில் அவர்கள் ஈடுபடுவதைத் தடுக்கக் கூடாது. மாணவர்களின் தன்னம்பிக்கையைச் சிதைக்கும்விதமாக, வகுப்பில், வீட்டில் என எங்கும் பேசக் கூடாது. 

இன்னொரு முக்கியமான விஷயமும் ஒன்றிருக்கிறது. சென்ற தலைமுறையினரை ஆசிரியர்கள் அடித்துத் திருத்தியதால்தான் நல்லபடியாக இருக்கின்றனர், இப்போது ஆசிரியர்களின் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன போன்ற கருத்துகள் நிலவுவது சரியானதல்ல. அந்தப் போக்கில் உள்ள குறைபாடுகளைக் களைவதற்கே இந்தக் கட்டுப்பாடுகள் என்பதை மனதார ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்கிறார் கீர்த்தன்யா

ஆயிஷா நடராஜன்

கல்விப் பணியில் தொடர்ந்து இயங்கிவரும் எழுத்தாளர் ஆயிஷா நடராஜனின் பார்வை வேறாக இருந்தது. "இந்தச் சம்பவங்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் வருத்தம் தரக்கூடியதாக இருந்தன. இந்த ஒன்றிரண்டு சம்பவங்களை வைத்து, ஆசிரியர் - மாணவர் உறவு சீர்குலைந்துவிட்டது என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது.  அது எப்போதும்போல ஆரோக்கியமானதாகவே இருக்கிறது. ஆனபோதும், நடந்துள்ள அசம்பாவிதங்களை எளிமையாகக் கடந்துவிட முடியாது. நம் பிள்ளைகளின் எதிர்காலம் என்பதால் கவனத்துடன் சில விஷயங்களைப் பேச வேண்டியிருக்கிறது. 

தேர்வு மாதம் என்றாலே மாணவர்கள் ஒருவித மன அழுத்தத்தில் இருப்பார்கள் என்பதுதான் வெளியில் தெரிவது. ஆசிரியர்களும் அதேபோன்ற மன அழுத்தத்தில் இருப்பதையும் நாம் பார்க்க வேண்டும். சென்ற ஆண்டைவிட, மாணவர்களின் தேர்ச்சி விழுக்காட்டை அதிகரிக்க வேண்டும் என மேலதிகாரிகள் தலைமை ஆசிரியருக்கு அழுத்தம் தர, அதைப் பள்ளி ஆசிரியர்களுக்குப் பகிர்ந்தளிக்கிறார் தலைமை ஆசிரியர். நடைமுறையில் சாத்தியமில்லாத பல விஷயங்கள் ஆசிரியர்கள் மேல் சுமத்தப்படுகின்றன. புதிய புதிய தேர்வுகளை நடத்துவதன்மூலம் ஆசிரியர், மாணவர் இருவருக்குமே வேலை பளுவும் மன அழுத்தமும் அதிகமாகின்றன. ஆசிரியரின் கண்கள் வழியாகவே மாணவர்கள் இவ்வுலகைப் பார்க்கின்றனர். எனவே ஆசிரியர் - மாணவர் உறவு சிறப்பாக அமைய அதற்கான சூழலையும் கல்வி அமைப்பு ஏற்படுத்தித் தர வேண்டும். 

கல்விமுறை முக்கோண வடிவமானது. ஒரு முனையில் ஆசிரியர், இரண்டாம் முனையில் மாணவர், மூன்றாம் முனையில் பெற்றோர் என இருக்க வேண்டும். ஆனால், தற்போது பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கல்விமீது காட்டும் அக்கறை போதுமானதாக இல்லை. அதில் இன்னமும் ஜனநாயகத்தன்மைகூட வேண்டும். ஏனெனில், இவை போன்ற வன்முறைகளின் பின்னால், ஆசிரியர் வீட்டினரை அழைத்துவரச் சொல்வதோ, வீட்டினரிடம் கூறிவிடுவேன் எனச் சொல்வதோ பிரதானமானதாக இருக்கிறது. ஆசிரியருக்குத் தன் வகுப்பின் 40 மாணவர்களைக் கண்காணிப்பதைவிடவும் தன்னுடைய ஒரு பிள்ளையை, பெற்றோர் எளிதாகக் கவனித்துகொள்ள முடியும். 

கல்விச் சூழல் மாறியிருப்பதை ஆசிரியர்களும் புரிந்துகொள்ள வேண்டும். தன் வகுப்பிலுள்ள மாணவர்களின் பெற்றோர் எண்களைப் பெறுவது சிரமமான ஒன்றல்ல. பிரச்னைக்கு உரிய மாணவர்களைப் பற்றிய செய்திகள் பரிமாறிக்கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். பெற்றோர்களும் ஆசிரியர்களுடன் இயல்பான உரையாடலை மேற்கொள்ள வேண்டியது அவசியம்." என்கிறார் ஆயிஷா நடராஜன். 

மாணவர்களின் கல்வித்திறன் மேம்படுத்துவதைப் போலவே, நல்ல பண்புகளையும் வளர்த்தெடுக்க வேண்டியது பள்ளிக்கூடங்களின் வேலை என்பதை நோக்கிய பயணமே ஆரோக்கியமானது. 


டிரெண்டிங் @ விகடன்