வெளியிடப்பட்ட நேரம்: 09:50 (08/02/2018)

கடைசி தொடர்பு:17:54 (30/06/2018)

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகப் புதுக்கோட்டை மக்கள் போராட்டம்..!

புதுக்கோட்டை மாவட்டம் நல்லாண்டார் கொல்லையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கான ஓ.என்.ஜி.சி நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகளை  மூட வேண்டும் என்றும், அதற்கான நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும் அப்பகுதி மக்கள் சிறு அளவிலான அடையாள ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.புதுக்கோட்டை மாவட்டம்  நெடுவாசல் அருகே உள்ள நல்லாண்டார்கொல்லை, கோட்டைக்காடு, வடகாடு, வாணக்கண்காடு, கருக்காகுறிச்சி ஆகிய ஐந்து இடங்களில், ஓ.என்.ஜி.சி நிறுவனம் கடந்த 1996 - 2006 வரையிலான காலகட்டத்தில் விவசாய நிலத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஆழ்துளைக் கிணறுகளை அமைத்தது. 

இந்நிலையில், நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தபடும் என மத்திய அரசு கடந்த ஆண்டு பிப் - 15-ம் தேதி அறிவித்தது. அதையடுத்து, விளைநிலங்களைப் பாதிக்கும் இத்திட்டத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களில்  ஈடுபட்டனர். அதன் அடிப்படையில் நல்லாண்டார்கொல்லை மக்களும் தங்கள் கிராமத்தில் உள்ள ஆழ்துளைக் கிணற்றை அகற்றக்கோரி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதையடுத்து அங்கு வந்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேஷ், ஒன்பது மாத காலத்திற்குள் எல்லா  எண்ணெய்க் கிணறுகளையும் மூடிவிடுவதாக எழுத்துபூர்வமாக உத்திரவாதம் அளித்தார்.

 அதனால், அக்கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். ஆனால், ஆட்சியர் கொடுத்த காலக்கெடு முடிந்து மூன்று மாதங்கள் கடந்தும் சம்பந்தபட்ட கிணறுகளை மூட, மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து, அப்பகுதியில் உள்ள விவசாயப் பெருங்குடியின் ஆண்களும் பெண்களும் சிறுவர் சிறுமிகளுமாக  50-க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை (07.02.2018.) அங்குள்ள ஆழ்துளை எண்ணைய்க் கிணறு அருகே நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 'உடனடியாக மாவட்ட நிர்வாகம் அங்குள்ள ஆழ்துளைக் கிணற்றை மூடாவிட்டால், அடுத்தகட்ட போராட்டங்களில் ஈடுபடப்போகிறோம். இது, அடையாள ஆர்ப்பாட்டம்தான். மிக விரைவில் பெரிய அளவில் எங்களது அடுத்த போராட்டம் இருக்கும்' என்றனர்.