`மாணவர்கள் முன்பு கைகட்டி ஊதியம் பெறும் கூலிகளாகப் பார்க்கப்படுகிறோம்!’ - வருந்தும் ஆசிரியர்கள் | 'We need protection from students' - Teachers hold protest

வெளியிடப்பட்ட நேரம்: 10:17 (08/02/2018)

கடைசி தொடர்பு:10:47 (08/02/2018)

`மாணவர்கள் முன்பு கைகட்டி ஊதியம் பெறும் கூலிகளாகப் பார்க்கப்படுகிறோம்!’ - வருந்தும் ஆசிரியர்கள்

தமிழகம் முழுவதும், இன்றும் நாளையும் ஆசிரியர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து பள்ளிக்குச் செல்லும் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். 

சமீபகாலமாகப் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகளின்மீது கொலைவெறித் தாக்குதல்கள் நடந்துவருகின்றன. அதை, அவர்களிடம் படிக்கும் மாணவர்களே செய்வதுதான் கொடுமை. இதுபோன்ற செயல்களைக் கண்டித்தும், வேலூரில் தலைமை ஆசிரியர் பாபுவின் தொடர் சிகிச்சைக்கு 20 லட்ச ரூபாய் வழங்க தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்தும், வேலைசெய்யும் பள்ளிகளில் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்திடும் பாதுகாப்புச் சட்டத்தை வலியுறுத்தியும், இந்த இரண்டு நாள்கள் கறுப்பு உடை மற்றும் கறுப்பு பேட்ஜ் அணிந்து தங்களது எதிர்ப்பை அமைதி வழியில் காட்டிவருகின்றனர். இதுகுறித்து, கந்தர்வகோட்டையைச் சேர்ந்த ஆசிரியர் மணிகண்டன் பேசும்போது...

' மாணவர்களின் தவறான நடத்தைகளைச் சுட்டிக்காட்டி திருத்தும் சமூக அக்கறையுள்ளவர்கள்தான் ஆசிரியர்கள். எங்களின் இந்த நல்ல நோக்கத்தைப் புரிந்துகொள்ளப் பக்குவமில்லாத மாணவர்களாலும் பெற்றோர்களாலும் அடிக்கடி தாக்கப்படும் நிகழ்வுகள் இப்போது தொடர்கதையாகிவிட்டன. 

ஆசிரியர்களை வெறியுடன் தாக்குவது எதற்காக என்று ஆராய்ந்தால், அவர்களின் நல்லொழுக்க நெறிகளில் முறையான வழிகாட்டல் இல்லாததே முதன்மைக் காரணமாக இருக்கிறது. அதேபோல,
ஆசிரியர்கள் மீதான தேவையற்ற சட்ட நெருக்கடிகளுமே இதுபோன்ற  சமூக இழி செயல்கள் நிகழக் காரணமாக இருக்கின்றன. எதற்கெடுத்தாலும் ஆசிரியரைக் குறைசொல்லியும் மிரட்டியும் தப்பித்துக்கொள்ள முடியும் என்ற துணிச்சல்தான், வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தனியார் உதவிபெறும் பள்ளியின் தலைமை ஆசிரியர் பாபுவை கத்தியால் தாக்கும் தைரியத்தை மாணவர்களுக்குத்தந்துள்ளது. அதேபோல, ஆசிரியர்கள் மீதான மதிப்பீடுகள் சமூகத்தில் குறைந்துவருவதும் ஒரு காரணம். கல்வியில் உச்சத்திலுள்ள பின்லாந்து போன்ற நாடுகளில் இருப்பதுபோன்று, ஆசிரியர்களுக்கான அந்தஸ்து இருக்கிறது. இங்கே அதுபோன்ற மதிப்பு கிடைக்காவிட்டாலும், குறைந்தபட்ச மரியாதையை ஆசிரியர்களுக்கு வழங்க இங்கே யாரும் தயாரில்லை. காரணம், தனியார் பள்ளிகளில் மாணவர்கள் முன்பு கைகட்டி ஊதியம் பெறும் கூலிகளாகப் பார்க்கப்படும் நிலையும், அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களை சாதி, மதம் போன்ற பின்புலத்துடன் பார்க்கும் குறு நோக்கமும் இன்றைய மாணவர்கள் மத்தியில் இருக்கிறது. சமூக விரோதிகள், தங்களது தேவைக்கு மாணவர்களைப் பயன்படுத்தும் நிலையும் இருக்கிறது. இதுபோன்ற நிலையில் ஆசிரியர்களின் வகுப்பறை கற்றலில் எட்டிப்பார்க்கும் சட்டமும், சமூகமும், மாணவர்களின் வளர்ச்சி எதிர்காலம், இவற்றை கருத்திற்கொள்வதில்லை. மாறாக, இதுபோன்ற வன்முறைச் செயல்களுக்கு தூபம்போட்டு வளர்த்துவிடுகிறது. இந்த நிலை மாற வேண்டும். சமூக விரோத மாணவர்களிடமிருந்து ஆசிரியர்களுக்குப் பாதுகாப்பு வேண்டும்' என்றார் வேதனை தெறிக்கும் குரலில்.