வெளியிடப்பட்ட நேரம்: 10:49 (08/02/2018)

கடைசி தொடர்பு:12:13 (08/02/2018)

`ஒரு ரெய்டுக்கு ஒரு லட்சம் வசூல்' - டாஸ்மாக் பெண் மேலாளரின் கிடா விருந்து ரகசியம்

சேலம் டாஸ்மாக் மாவட்ட மேலாளராக இருப்பவர் தெய்வநாயகி. இவர், டாஸ்மாக் ஊழியர்களிடம் லஞ்சம் வசூலிப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறைக்குத் தகவல் போக, கடந்த வாரம் அவருடைய அலுவலகத்திற்குள் லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளே புகுந்து கணக்கில் வராத இரண்டு லட்சத்து 50 ஆயிரத்தைக் கைப்பற்றியது.  தற்போது தெய்வநாயகி, துறைரீதியான நடவடிக்கைக்குக் காத்திருக்கிறார்.

தெய்வநாயகிக்கு, டாஸ்மாக் அ.தி.மு.க தொழிற்சங்கத்தினர் பணம் வசூலித்துக் கொடுத்ததைப்போல தி.மு.க தொழிற்சங்கமும் பணம் வசூலித்துக் கொடுத்தார்கள். இந்தத் தகவல் வெளியில் செல்ல வேண்டாம் என்பதற்காக, அயோத்தியாபட்டணம் மஞ்சவாடி கணவாய் அருகே உள்ள வெள்ளையப்பன் கோயிலில், தி.மு.க தொழிற்சங்க மேற்பார்வையாளர்கள், அ.தி.மு.க தொழிற்சங்க மேற்பார்வையாளர்களுக்கு கிடா விருந்து வைத்திருக்கிறார்கள்.

இதுபற்றி டாஸ்மாக் ஊழியர்களிடம் பேசியபோது, 'சேலம் மாவட்டத்தில், மொத்தம் 246 அரசு டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன. நீதிமன்ற உத்தரவுப்படி, சாலையோரத்தில் இருந்த 115 கடைகள் மூடப்பட்டன. அந்த ஊழியர்களை வேறு கடைக்கு மாற்றியதில் ஊழியர்களிடம் பல லட்சம் கையூட்டு பெற்றார்.

தெய்வநாயகி, டாஸ்மாக் கடைகளுக்கு ரெய்டுக்காகக் கிளம்பினால், அன்று ஒரு லட்சம் கையூட்டு பெறாமல் அலுவலகத்துக்குத் திரும்ப மாட்டார். அதுமட்டுமல்லாமல்,  மாதந்தோறும் ஒவ்வொரு கடையிலிருந்தும் 6,000 ரூபாய் கப்பம் கட்ட வேண்டும். சேலம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு பார் ஏலம் விடாமல், முறைகேடாகத் தனியார் பார்களை அங்கீகரித்து, ஒவ்வொரு பாருக்கும் மாதந்தோறும் 50 ஆயிரம் பெற்றார்.

தெய்வநாயகிக்கு புரோக்கர்களாக டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் சுந்தரபாண்டியன், முருகன், சங்கர், ராமர் ஆகியோர் செயல்பட்டார்கள். இவர்களைப்போல டாஸ்மாக் தி.மு.க தொழிற்சங்க மேற்பார்வையாளர்களும் பார் உரிமையாளர்களிடம் பணம் வசூலித்து,  தெய்வநாயகிக்குக் கொடுத்திருக்கிறார்கள். தி.மு.க தொழிற்சங்க மேற்பார்வையாளர்கள் பெயர்கள் வெளியே வரவேண்டாம் என்று மஞ்சவாடி வெள்ளையப்பன் கோயிலில் அ.தி.மு.க தொழிற்சங்க மேற்பார்வையாளர்களுக்குக் கடா கறி விருந்து வைத்திருக்கிறார்கள். தெய்வநாயகி இப்பதவிக்கு வந்து  ஒன்றரை வருடத்தில், தஞ்சாவூரில் மூன்றரை கோடியில் வீடும், ஐந்து கோடிக்கு மேல் மதிப்புடைய மிகப் பெரிய வணிக வளாகத்தையும் வாங்கியிருக்கிறார்' என்றார்கள்.