வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (08/02/2018)

கடைசி தொடர்பு:13:20 (08/02/2018)

``நாங்கள் வானத்திலிருந்து குதித்தவர்கள் அல்ல'' - அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்ற பெண் நீதிபதி நெகிழ்ச்சி

அரியலூர் மாவட்ட ஆட்சியரைத் தொடர்ந்து அரியலூர் நீதிபதியும் அரசு மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்துகொண்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் அரியலூர் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பிரியா அரியலூர் அரசுப் பொது மருத்துவமனையில் குடல்வால்வு அறுவைசிகிச்சை செய்துகொண்டு அரசு மருத்துவமனையின் மீதான நம்பிக்கையை மக்கள் மத்தியில் உணர்த்துவதற்காகச் சிகிச்சை மேற்கொண்டதாகச் சொல்லி அனைவரது பார்வையும் அரசு மருத்துவமனையின்மீது திருப்பினார் ஆட்சியர். இந்த சம்பவம் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியதால் ஆட்சியரையும் அரசு மருத்துவர்களையும் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.

இந்நிலையில், கடந்த திங்களன்று அரியலூர் குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் மகாலட்சுமி, அரியலூர் அரசுப் பொது மருத்துவமனையில் குடல் இரக்க அறுவைசிகிச்சை செய்துகொண்டு தொடர்ந்து அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சைபெற்று வருகிறார். இதையறிந்த பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் சிறப்பான முறையில் சிகிச்சை அளித்துவரும் அரசு மருத்துவர்களையும் மக்களோடு மக்களாக வந்து அறுவைசிகிச்சை செய்துகொண்ட மாஜிஸ்ட்ரேட் மகாலட்சுமியை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

ஒரு சிலர் வெளியில் பார்க்கலாமே என்று சொல்ல அதற்கு அவர், ``ஏன் நீதிபதி, அரசு மருத்துவமனையில் மருத்துவம் பார்த்துக்கொள்ளக் கூடாதா. நீதிபதி என்பவர்கள் வானத்திலிருந்து குதித்தவர்கள் அல்ல; நாங்களும் மனிதர்கள்தான். எங்களைப் போன்றவர்கள் அரசு மருத்துவமனையில் மருத்துவம் பார்த்தால் மக்கள் மத்தியில் அரசு மருத்துவமனையின்மீது நல்ல மதிப்பு ஏற்படும். இலவசமாகக் கிடைக்கும் எந்த ஒரு பொருளுக்கும் மதிப்பு இருக்காது. அதுபோலதான் அரசு ஊழியர்களும் தனியார் மருத்துவமனையைப் புறக்கணித்து அரசு மருத்துவமனை நாட வேண்டும்'' என்று சொல்லியிருக்கிறார்.