வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (08/02/2018)

கடைசி தொடர்பு:13:40 (08/02/2018)

தடையை உடைத்த மாணவர்களைக் கெளரவப்படுத்தும் அய்யம்பட்டி ஜல்லிக்கட்டு!

தேனி மாவட்டத்தில் வரும் 11-ம் தேதி புகழ்பெற்ற அய்யம்பட்டி ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளில் அய்யம்பட்டி கிராம கமிட்டியும் மாவட்ட நிர்வாகமும் தீவிரம் காட்டிவருகிறது. ஜல்லிக்கட்டு ஏற்பாடு தொடர்பாக நம்மிடம் பேசிய அய்யம்பட்டி கிராம கமிட்டியைச் சேர்ந்த அண்ணாதுரை, ''கடந்த வருடத்தைவிட இந்த வருடம் அதிகமான மக்கள் ஜல்லிக்கட்டைப் பார்க்க வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். வாடிவாசல் தயாராக இருக்கிறது. பார்வையாளர்கள் அமரும் பகுதியும் தயாராகிவருகிறது. குறிப்பாக ஜல்லிக்கட்டு தடையை உடைத்த மாணவர்களுக்காக ஒரு பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. காளைகள் பதிவும் வீரர்கள் பதிவும் முடிவடைந்துவிட்டது. இதுவரை 650 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

திருச்சி, மதுரை, விருதுநகர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சேலம் ஆகிய பகுதிகளில் இருந்து காளைகள் ஜல்லிக்கட்டிற்கு வர இருக்கிறது. மொத்தம் 600 வீரர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். காளைகளுக்கும், காளையைப் பிடிக்கும் வீரர்களுக்கும் மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பில் தீவிர பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே களத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். கடந்த வருடத்தைவிட இந்த வருடம் அதிக பரிசுகள் வழங்குகிறோம். பைக், கட்டில், பீரோ, தங்கக் காசு என வீரர்களை உற்சாகப்படுத்தும் பல பரிசுகள் காத்துக்கொண்டிருக்கின்றன. துணை முதல்வர் பன்னீர்செல்வம், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன் ஆகியோருக்கு அழைப்பு கொடுத்திருக்கிறோம்’’ என்றார்.