வெளியிடப்பட்ட நேரம்: 13:28 (08/02/2018)

கடைசி தொடர்பு:16:50 (08/02/2018)

“எண்ணியது முடிய காசு வேண்டும்” - அண்ணா முதல் பாரதியார் வரை, பல்‘கொள்ளைக்’ கழகங்களின் கதை! பகுதி-1

பல் ‘கொள்ளைக்’ கழகங்களின் கதை

“எண்ணிய முடிதல் வேண்டும்… நல்லனவே எண்ணல் வேண்டும்… திண்ணிய நெஞ்சம் வேண்டும்… தெளிந்த நல்லறிவு வேண்டும்…” என்று பாடிச்சென்றார் பாரதியார். ஆனால், அவர் பெயரில் இயங்கும் பல்கலைக்கழகமே, இவை எதுவும் வேண்டாம், பணம் மட்டும் போதும் என்று சொல்லிவருகிறது. கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் உள்ளவர்களின் கல்விப்பசிக்காக ஆரம்பிக்கப்பட்ட பல்கலைக்கழகம், இன்று அதிலிருக்கும் அதிகாரிகளின் பணப்பசிக்காக இயங்கி வருகிறது. ஊழல்களின் ஒவ்வொரு துணைவேந்தரும், மற்ற துணைவேந்தர்களை ஓவர்டேக் செய்ய, தரவரிசையில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது பாரதியார் பல்கலைக்கழகம். பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ள பிரச்னைகள் குறித்து முன்னாள், இன்னாள் மாணவர்கள், பேராசியர்கள், ஊழியர்கள், சிண்டிகேட், செனட் உறுப்பினர்கள், கல்வியாளர்கள் என அனைவரிடமும் பேசினோம்.

பாரதியார் பல்கலைக்கழகம்

“பல்கலைக்கழகம் 1000 ஏக்கரில் தொடங்கப்பட்டது. பல்வேறு மக்கள் தங்களது நிலங்களை இந்தப் பல்கலைக்கழகத்துக்குக் கொடுத்துள்ளனர். அப்படி நிலம் கொடுத்தவர்களுக்குப் பணி வழங்கப்படும் என்பதுதான் உடன்பாடு. ஆனால், தற்போதுவரை சிலருக்குப் பணி வழங்கப்படவில்லை. கடந்த 2001-ம் ஆண்டு முதல் புதிதாக, நான் டீச்சிங் பணியாளர்கள் பணியமர்த்தப்படவில்லை. மொத்தம் 480 பணியிடங்களில், 220 இடங்கள் காலியாக உள்ளன. ஆனால், 480 ஊழியர்களுக்கான நிதியைப் பல்கலைக்கழகம் தொடர்ந்து பெற்று வருகிறது.

அதேநேரத்தில், டீச்சிங்கைப் பொறுத்தவரை அரசு அனுமதித்துள்ளது 120 பேரைத்தான். ஆனால், தற்போது 300-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இவற்றில், பல்வேறு துறைகளில் மாணவர்களே கிடையாது. பேராசிரியர் பணிகளுக்கு 25 லட்ச ரூபாய் முதல் 65 லட்ச ரூபாய் வரை வாங்கிவிட்டு, அப்பாயின்ட்மென்ட் போட்டுவிடுகின்றனர். பேராசிரியர் பணி நியமனத்தில் ஊழல், தொலைமுறை கல்விக்கூடத்தின் கீழ் ஸ்டடி சென்டர் அமைத்ததில் ஊழல், தேர்வுத்தாள்களை எடைக்குப் போட்டதில் ஊழல் என்று எங்கும் ஊழல் மயம்தான்.

பாரதியார் பல்கலைக்கழகம்

அதேபோல, 20 ஆண்டுகளுக்கும் மேலாக, பல்கலைக்கழக கேன்டீன் ஒரே நபரிடம்தான் உள்ளது. மாலை நேரத்தில் சில பேராசியர்களுக்கு இந்த கேன்டீன்தான் பாராகவும் பயன்படுகிறது. மாணவர்கள் தேர்வுக் கட்டணம், செமஸ்டர் கட்டணம் கட்ட, ஒரே ஒரு வங்கிதான் உள்ளது. அந்த வங்கியிலும் எப்போதும் கூட்டம்தான். இதனால் மாணவர்களுக்கு ஒரு வகுப்பே வீணாகிறது. ஸ்டடி சென்டர் அமைப்பதில், யூ.ஜி.சி-யின் விதிமுறைகள் யாவும் மீறப்பட்டுள்ளன. 400-க்கும் மேற்பட்ட சென்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. டாஸ்மாக்குக்கு அமைப்பதுபோல, ஒரு ஏஜென்டை அமைத்து, ஒரு சென்டருக்கு 15 லட்ச ரூபாய் வாங்கியுள்ளனர். இதை எதிர்த்து, சிண்டிகேட் கூட்டத்திலும் கேட்க முடியாது. ஏனென்றால், தனியார் கல்லூரிகளைச் சேர்ந்தவர்கள்கூட, கவர்னர் அலுவலகத்தில் 10 லட்ச ரூபாய் வரை கொடுத்துவிட்டு சிண்டிகேட் மெம்பர் ஆகிவிடுகின்றனர்.

இதுத்தவிர சிண்டிகேட் உறுப்பினர்களுக்குத் தனித்தனியாக, பெரிய தொகையைக் கொடுத்துள்ளார் துணைவேந்தர். மேலும், தங்களது ரெஃபரன்ஸ்களுக்குக் கிடைக்கும் லஞ்சத்தை, ஷேரிங் இல்லாமல் அவர்களே எடுத்துக்கொள்ளலாம் என்ற டீலிங்கும் உள்ளது. துணைவேந்தராக இருந்து, ஊழல் செய்து ரிட்டயர்டு ஆனவர்கள்தாம், அடுத்த துணைவேந்தரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்புகளில் இருக்கின்றனர். மேலும், பதிவாளர், தேர்வுத்துறை துணைக் கட்டுப்பாட்டாளர், தொலைமுறைக்கல்விக்கூட இயக்குநர், மக்கள் தொடர்பு அலுவலர் உள்ளிட்ட முக்கியப் பதவிகள் பொறுப்பு அடிப்படையில் கூடுதலாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

பாரதியார் பல்கலைக்கழகம்

டீலிங்கில் தனக்கு ஒத்துழைப்பவர்களுக்கே, இந்தப் பொறுப்புப் பதவிகளை கணபதி கொடுத்துள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு நடந்த பேராசிரியர் பணி நியமனத்தில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளது. குறிப்பாக, தங்களுக்கு வேண்டப்பட்டவர்கள் என்பதற்காகவே, எந்தத் தகுதியும் இல்லாதவர்களுக்குப் பணிகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால், தகுதியுள்ள பலரது குடும்பங்கள், பைத்தியமாகியுள்ளன.

குறிப்பாகத் தனக்கு வேண்டப்பட்ட துணைவேந்தரைக் காப்பாற்றுவதற்காக, ஒருவருக்குப் பணம் எதுவும் வாங்காமல் உதவிப் பேராசிரியர் பணி வழங்கியுள்ளார். ஆராய்ச்சிப் படிப்புக்குப் பணம், பணியில் சேர பணம், அந்தப் பணிக்கு ப்ரமோஷன் வாங்க பணம், டெண்டருக்குப் பணம், டெண்டரைத் தக்கவைக்க சிறப்புக் கவனிப்பு என்று அனைத்துக்கும் பணம் மட்டுமே முக்கியத் தகுதி என்றாகிவிட்டது. தனக்கு ஒத்துழைக்காமல் எதிராகச் செயல்படுபவர்களுக்கு, எந்த நல்லதும் நடக்கவிடாமலும் கணபதி பார்த்துக்கொள்வார்.

இங்கு நடக்கும் அனைத்து முறைகேடுகளுக்கும் பல மூத்த அதிகாரிகளுக்குப் பங்கு உள்ளது. எத்தனை துணைவேந்தர்கள் மாறினாலும், இந்த அதிகாரிகளின் ஊழல் மட்டும் மாறாது" என்றனர்.

பல்கலைக்கழகத்தில் முறைகேடுகளில் ஈடுபவர்கள் குறித்து நமக்கு ஒரு லிஸ்ட் கிடைத்தது. அதில் உள்ள அனைவரிடமும் விளக்கம் கேட்டோம். இதில், தற்போது பாரதியார் பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவராக இருக்கும் முனைவர் ஞானசேகரனும் ஒருவர். இவர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆவதற்கு முயற்சி செய்து, முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகனராவைச் சந்தித்து ஐந்து கோடி ரூபாய் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. இவர் தற்போது, பாரதியார் பல்கலைக்கழகத்தின் ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் இயக்குநராகவும் உள்ளார். ஆராய்ச்சி மாணவர்களிடமும், 5 லட்ச ரூபாய் வாங்குவதாகக் குற்றச்சாட்டு உள்ளது. இதுதவிர, தனது சொந்தச் சகோதரருக்கு 10 லட்ச ரூபாய் கொடுத்து சிண்டிகேட் உறுப்பினர் பதவி வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

பாரதியார் பல்கலைக்கழகம்

இதுதொடர்பாக, ஞானசேகரனை நேரில் சென்று சந்தித்தோம்,“தம்பி, நான் கிராமத்துல இருந்து வந்தவன். நாம வளர்றத கண்டு ஞ◌ானசேகரன்பொறாமைல சிலர் அப்படிப் பொய்க் குற்றச்சாட்டுகளை வைக்கிறாங்க. நான் கலைஞரிடம், கலைமாமணி விருது வாங்கியவன். நாட்டின் சிறந்த பேராசிரியர் விருதும் வாங்கியுள்ளேன். நான் ஒரு தலித். தலித் ஒருத்தன் மேல் இடத்துக்கு எல்லாம் வரக் கூடாதா? உயர்ந்த சாதிக்காரங்க மட்டும்தான் அந்த இடத்துக்கு வரணுமா?" என்று நம்மிடம் கேட்டார். "சார் அதற்குப் பயன்படுத்தும் வழிமுறைதான் பிரச்னை" என்றோம்.

ஞானசேகரன் தொடர்ந்தார், "தம்பி எனக்கு கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் எல்லாம் நல்ல பழக்கம். நான் கல்வியாளர் ஆகாட்டி, அந்தப் பக்கம் போயிருப்பேன். அந்த …. தான என்னப்பத்தி உங்ககிட்ட சொன்னான். உங்க பத்திரிகைல என் பெயர் வந்தா அவன நான் அறுத்துடுவேன். மர்டர்தான். நான் ஆயுதக் கலாசார வழில வந்தவன் தம்பி.  சத்தியமா அவன கொன்னுடுவேன் தம்பி. அவன் இங்க வேலைக்குச் சேர முயற்சி செய்தான். திறமை இல்லை. அதனால, அவனுக்கு வேலை கிடைக்கல. அந்தக் கடுப்புல, அவன் என்னப்பத்தி தப்புத் தப்பான தகவலைப் பரப்பினான்.

நான் பொண்ணுங்ககூட எல்லாம் தொடர்பு வெச்சுருக்கேன்னு அவதூறு பரப்பினான். நான் தவறே செய்யாதவன் தம்பி. ஆனா, இப்படிச்  சொல்றப்ப மனசு கஷ்டமா இருக்கு. எனக்குப் பொறுப்பு கொடுக்குற பொறாமைல இப்படிக் கிளப்பி விடறாங்க" என்றார்.

பாரதியார் பல்கலைக்கழகம்

பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடக்கும் தேர்தல்கள் எல்லாம், ஆர்.கே.நகர் ஃபார்முலாவைத் தூக்கிச் சாப்பிட்டுவிடும். அண்மையில் நடந்த சிண்டிகேட் உறுப்பினர்கள் தேர்தல் மற்றும் ஆசிரியர் சங்கத் தேர்தல் ஆகியவற்றுக்காக, லட்சக்கணக்கில் செலவு செய்யப்பட்டன. இதில் ஆசிரியர் சங்கத்தேர்தல் செல்லாது என்று நீதிமன்றமே அறிவித்துவிட்டது. துணைவேந்தர் கணபதி, பேராசிரியர் தர்மராஜ், தொலைதூரக் கல்விக்கூட இயக்குநர் மதிவாணன் ஆகியோரைத் தொடர்ந்து, மேலும் சிலர் அடுத்தடுத்து சிக்குவார்கள் என்றும் கூறப்படுகிறது.

பாரதியார் பல்கலைக்கழகம்

பல்கலைக்கழக வளாகத்தில் ரவுண்ட் அப் வந்தோம், ஹாஸ்டல் வளாகம் மட்டுமல்ல, பல்கலைக்கழகத்தின் மெயின் பிளாக் அருகிலேயே, நிரோத் பாக்கெட்டுகள், போதை வஸ்து பாக்கெட்டுகளைக் காண முடிந்தது. பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்தவுடன், நம்மை வரவேற்கும் பாரதியார் சிலை தூசி படிந்து காணப்பட்டது. அது பாரதியார் மீதான கறை இல்லை. பல்கலைக்கழகத்தின் மீதான கறை.

 


டிரெண்டிங் @ விகடன்