'மார்க்கெட்ல கேட்டுப்பார்... நான் யாரென்று தெரியும்' - ரவுடி பினுவின் க்ரைம் ஹிஸ்டரி

ரவுடி பினு

சென்னை மாங்காடு பகுதியில் உள்ள லாரி ஷெட்டில் கூட்டாளிகளுடன் பிறந்தநாள் கொண்டாடினார் பிரபல ரவுடி. கேரளாவிலிருந்து சென்னையில் செட்டிலானது பினுவின் குடும்பம். சென்னை சூளைமேட்டில் உள்ள மார்க்கெட்டில்தான் பினுவின் ஆரம்பக்கால ரவுடி சாம்ராஜ்ஜியம் தொடங்கியதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். மார்க்கெட்டில் நடந்த முதல் அடிதடி வழக்கில் சூளைமேடு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படுகிறார் பினு. அதன்பிறகு சென்னை ரவுடிகள் பட்டியலில் பினுவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. 1994-ம் ஆண்டில் பினுவுக்குத் தனி கேஸ் ஹிஸ்டரி சூளைமேடு போலீஸ் நிலையத்தில் தொடங்கப்படுகிறது. அப்போது பினுவின் வலதுகரமாக அரும்பாக்கத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் இருக்கிறார். இருவரும் இணைந்து கொலை, ஆள்கடத்தல் எனப் பல குற்றச்சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.

இருவரின் பெயர்களிலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்ட போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவாகின்றன. சென்னையில் உள்ள ரவுடிகளில் பிரபலமானவராக வலம்வந்துள்ளார் பினு. ஒரு கட்சியின் ஆதரவாளராகவும் செயல்பட்டுள்ளார். ஆளைக் கடத்தி பணம் பறிப்பதில் கில்லாடி என்கின்றனர் பினுவுக்கு நெருக்கமானவர்கள். பினுவைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். 'தன்னை நம்பி வந்தவர்களை என்றுமே பினு கைவிட்டதில்லை. அதே நேரத்தில் அவரை எதிர்த்தவர்களையும் விட்டுவைத்ததில்லை' என்று சொல்கின்றனர் பினுவை அறிந்தவர்கள். 'நான் யாரென்று சூளைமேடு மார்க்கெட்ல கேட்டுப்பார்' என்று பினுவை எதிர்த்தவர்களிடம் அடிக்கடி அவர் சொல்வதுண்டாம். 

பினு பிறந்தநாள் கொண்டாடி இடம்

வடபழனி போலீஸ் நிலையத்தில் பினு மீதுள்ள வழக்கில் கடந்த 2014-ம் ஆண்டு ஜாமீனில் வெளியில் வந்த அவர், தலைமறைவாகி விட்டார். அவரைத் தேடித் தேடி அலுத்துப்போன சென்னை போலீஸ், ஒருகட்டத்தில் பினுவைக் கடந்த மூன்று ஆண்டுகளாக மறந்தே விட்டதாகத்தான் சொல்ல வேண்டும். ஏனெனில் 2014-ம் ஆண்டுக்குப்பிறகு பினு, பெரியளவில் குற்றச்செயல்களில் ஈடுபடவில்லை. அவரும் அவரது ஆதரவாளர்களும் அமைதியாகவே இருந்துள்ளனர். தமிழகத்தைக் காலிசெய்துவிட்டு சொந்த மாநிலமான கேரளாவில் பினு, தலைமறைவாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அங்கு அவர் சிகிச்சை பெற்றதாகவும் காரணம் சொல்லப்படுகிறது.

 இந்தக் காலகட்டத்தில் பினுவின் வலதுகரமாக இருந்த அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் கை ஓங்கியது. ராதாகிருஷ்ணன் சிறையில் இருந்தபடியே காரியத்தைக் கச்சிதமாக நடத்திவந்ததாகச் சொல்லப்படுகிறது. இது, பினுவின் கூட்டாளிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் பினுவின் வலதுகரமாக இருந்த ராதாகிருஷ்ணன், பினுவுக்கு எதிரியாகவும் மாறியுள்ளார். இதனால் பினு, ராதாகிருஷ்ணன் என இரண்டு டீம்களாகப் பிரிந்து செயல்பட்டுள்ளனர். பினுவை நம்பிய கூட்டாளிகளுக்கு ராதாகிருஷ்ணன் கும்பலால் பலவகையில் இடையூறு ஏற்பட்டது. பினு இருந்த முதல் இடத்தை ராதாகிருஷ்ணன் பிடித்தார். இதனால் அந்த இடத்துக்குப் பினுவைக் கொண்டுவர அவரது கூட்டாளிகள் விரும்பினர். இதற்காகத்தான் பினுவின் பிறந்தநாளைக் கொண்டாட அவர்கள் முடிவு செய்தனர்.

கேரளாவிலிருந்த பினுவிடம் பேசிய அவருக்கு நெருக்கமானவர்கள், 'தலைவா நீ மீண்டும் வரவேண்டும்' என்று கோரிக்கை விடுத்தனர். அப்போதுதான் பினுவின் 45 வயது பிறந்தநாளை சினிமாபட பாணியில் வெகுவிமர்சையாக கொண்டாட அவரின் கூட்டாளிகள் திட்டமிட்டனர். அதற்காக, மாங்காடு அருகே உள்ள மலையம்பாக்கத்தில் உள்ள ஒருவரது லாரி ஷெட் தேர்வு செய்யப்பட்டது. லாரி ஷெட் அமைந்துள்ள இடம் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்தாலும், வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையை (ரிங் ரோடு) ஒட்டியே இருப்பதால் அனைவரும் வர வசதியாக இருக்கும் என்று கருதப்பட்டது.

 கூட்டாளிகளுடன் ரவுடி பினு

பினுவின் ஆரம்பக்கால நண்பர்கள் முதல் தற்போதைய கூட்டாளிகள் வரை அனைவருக்கும் எஸ்.எம்.எஸ்ஸில் அழைப்பு விடுக்கப்பட்டது. பினுவுக்கு மிகவும் நெருக்கமானவர்களுக்கு அவரே போன் செய்து அழைப்புவிடுத்தார். அதன்படி, அனைவரும் லாரி ஷெட்டுக்கு வந்து பிறந்தநாள் மது விருந்தில் திளைத்தனர். அரிவாளால் கேக்கை வெட்டி பினுவும் தன்னுடைய கூட்டாளிகளை உற்சாகப்படுத்தினார். 'நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' என்பதை வெளிப்படுத்தும் வகையில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. 
 பினு எதிர்பார்த்த அந்த இரண்டு ரவுடிகள் வரவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால், பினு மற்றும் அவரது கூட்டாளிகளின் கொலைத் திட்டம் நடக்கவில்லை

 இதற்கிடையில் ரவுடிகள் ஒரே இடத்தில் கூடியிருக்கும் தகவல் கிடைத்ததும் சென்னை போலீஸார் அவர்கள் அனைவரையும் கூண்டோடு பிடித்து சிறையில் அடைத்துள்ளனர். ரவுடி பினுவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றவர்களிடமிருந்து கைப்பற்றி ஆவணங்களைப் பார்த்து போலீஸாரே திகைத்துப்போய் உள்ளனர். ரவுடிகள் வந்த கார், பைக்கில் பிரஸ், வழக்கறிஞர் போன்ற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்துள்ளன. இன்னும் சில ரவுடிகளிடம் பிரஸ் அடையாள அட்டைகள் இருந்துள்ளன. அதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். 
 
 போலீஸாரிடமிருந்து தப்பிய ரவுடிகள் பினு, விக்கி, கனகு உள்ளிட்ட சிலரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ரவுடிகள் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாக ஒவ்வொருவரும் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அதன்படி புளியந்தோப்புக் காவல் நிலையத்தில் ஐந்து ரவுடிகள், அம்பத்தூருக்கு ஏழு பேர், அண்ணாநகருக்கு 18, சூளைமேடு, ராயபேட்டைக்கு 13, தி.நகருக்கு மூன்று, மாதவரத்துக்கு  நான்கு, திருவல்லிக்கேணிக்கு ஒன்பது, கீழ்ப்பாக்கத்துக்கு இரண்டு, மயிலாப்பூருக்கு இரண்டு, காஞ்சிபுரத்துக்கு இரண்டு, பூந்தமல்லிக்கு 10 என மொத்தம் 72 பேரும் அனுப்பிவைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதுதான் பினுவின் ஸ்டைல்

 ஒவ்வொரு ரவுடிகளுக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும். அதுவே, குற்றவாளிகளைப் பிடிக்க உதவியாக இருக்கும். அதன்படி பினுவால் கொல்லப்பட்டவர்கள் என்றால் தலை, தனியாகத் துண்டிக்கப்படுமாம். அதன்பிறகு அடையாளம் தெரியாதபடி முகம் சிதைக்கப்பட்டு எரிக்கப்படும். அதைக்கொண்டு பினுமீது வழக்குகள் பதிவாகியுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. 

 பினுவைத் தப்பிக்கவைத்த போன் அழைப்பு 

 மாங்காடு அருகே உள்ள மலையம்பாக்கம் கிராமத்தில் பினு, பிறந்தநாள் கொண்டாட இதுவும் காரணமாகச் சொல்லப்படுகிறது. ஏனெனில், இந்த இடம் பூந்தமல்லி, மாங்காடு போலீஸ் நிலைய எல்லைகளில் வருகிறது. இதனால் அடிக்கடி போலீஸ் எல்லை பிரச்னையைச் சந்திக்கும் மலையம்பாக்கம் கிராமப் பகுதியை பினுவின் கூட்டாளிகள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

பிறந்தநாள் விழாவுக்கான செலவை சிலர் ஏற்றுள்ளனர். அவர்கள் யார் என்று ரகசிய விசாரணை நடந்துவருகிறது. பினுவை மீண்டும் பிரபலப்படுத்தியதில் சில உள்நோக்கம் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், போலீஸார் அந்த இடத்தைச் சுற்றி வளைத்த சமயத்தில் பினுவுக்கு வந்த போன் தகவல் அடிப்படையில் பினு உள்ளிட்ட சிலர் தப்பிச் சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னையில் ஒரே நேரத்தில் 75 ரவுடிகள் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது, தமிழகச் சட்டம் ஒழுங்கு எந்த நிலையில் இருப்பது தொடர்பான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!