``நடிகர் சங்கக் கட்டடம் கட்டி முடிந்ததும் கல்யாணம்!'' - நடிகர் விஷால்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், சங்கரதாஸ் சுவாமிகளின் 95-வது குருபூஜையில் கலந்துகொண்ட நடிகரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, 'சினிமா ஃபிலிம் தயாரிக்கும் நிறுவனமான கியூப், கோலிவுட், இந்திப் படங்களுக்கு ஃபிலிம் பிரின்ட் எடுத்துக்கொடுக்க 10,000 ரூபாய் வாங்குகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிப் படங்கள் ஃபிலிம் ஒரு பிரின்ட் எடுக்க 32,000 ரூபாய் வாங்குகிறது. இந்த நிறுவனத்திடம் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்துவிட்டோம். உடன்பாடு ஏற்படவில்லை. தொடர்ந்து அந்த நிறுவனம், அதிகமான கட்டணங்களை வசூல்செய்துவருகிறது. ஆகையால், மார்ச் 1-ம் தேதி முதல் திரைப்படங்கள் வெளியிடுவதில்லை என்ற முடிவு தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஐந்து மாநிலப் படத் தயாரிப்பாளர்கள் முடிவு எடுத்திருக்கிறோம். வரும் 16-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். அது முடியவில்லை என்றால், எங்களுக்கு வேறு வழி இல்லை' என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து, ரஜினி, கமல் அரசியலில் இறங்கியிருப்பதுகுறித்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த விஷால், காலம்தான் அவர்களுக்குப் பதில் சொல்லும் என்றவர், நடிகர் சங்கக் கட்டடம்குறித்த கேள்விக்குப் பதிலளிக்கும்போது, ``திருமண ஆசை எனக்கு வந்திருக்கிறது. ஏனென்றால், அப்போதுதான் சீக்கிரமே நடிகர் சங்கக் கட்டடம் விரைவில் முடியும். சினிமா நண்பர்களும் என் திருமணத்தைக் காரணம் காட்டி முழு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். நடிகர் சங்கக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டதும், அங்கு நடக்கும் முதல் திருமணம் என்னுடைய திருமணம்தான். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்து பிடிமண் எடுத்து வந்து, நடிகர் சங்கக் கட்டடத்தின் முன் தூண் கட்டப்பட இருக்கிறது.

அடுத்ததாக, உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதியைத் தமிழக அரசு விரைவாக அறிவிக்க வேண்டும். உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாததால், பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாமல் அவதிப்படுகிறார்கள். மேலும், நாடாளுமன்றத் தேர்தல் சட்டமன்றத் தேர்தலின்போது, புதுமுகங்கள் வேட்பாளர்களாகக் களமிறங்க இருக்கிறார்கள். அப்போது, தமிழகத்திலும் மத்தியிலும் ஆட்சி மாற்றம் வரும்' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!