`சாட்சிகளைக் கலைத்துவிடுவார்' - கணபதி ஜாமீன்மனு தள்ளுபடி; குவியும் புகார்கள் | Ganapathy's Bail plea dismissed

வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (08/02/2018)

கடைசி தொடர்பு:16:23 (08/02/2018)

`சாட்சிகளைக் கலைத்துவிடுவார்' - கணபதி ஜாமீன்மனு தள்ளுபடி; குவியும் புகார்கள்

பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த கணபதி, லஞ்சப் புகாரில் சிக்கி கைதாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உதவிப்பேராசிரியர் பணிக்காக, அதே பல்கலைக்கழக வேதியியல் துறையில் பணிபுரியும் சுரேஷ் என்பவரிடமிருந்து, 30 லட்சம் லஞ்சம் பெற்றதற்காக, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் கையும், களவுமாகச் சிக்கினார். அவருடன் சேர்த்து, வேதியியல் துறை பேராசிரியர் தர்மராஜூம் கைது செய்யப்பட்டுள்ளார். லஞ்சத்துக்கு, இடைத்தரகராகச் செயல்பட்ட குற்றத்துக்காக, தர்மராஜூம் கைது செய்யப்பட்டுள்ளார். இதைத்தவிர, தொலைதூரக் கல்விக்கூட இயக்குநர் மதிவாணன் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்டடி சென்டர் அமைப்பதில் நடைபெற்ற ஊழல் மற்றும் துணைவேந்தர் கணபதிக்கு, கேஷ் டீலிங்கில் பக்கபலமாக இருந்தவர் மதிவாணன்தான். இவர், கணபதியின் உறவினராவார்.

இவர்களைத்தவிர, கடந்த 2016-ம் ஆண்டு, பேராசிரியர் பணி நியமனத்தில் நடந்த ஊழல் தொடர்பாக, தொடர்பு உள்ள, மேலும் பேராசிரியர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, இந்த வழக்கிலிருந்து ஜாமீனில் வெளிவர, துணைவேந்தர் கணபதி தரப்பில், மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு, கோவை ஊழல் தடுப்புச் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கணபதிக்கு ஜாமீன் வழங்க, லஞ்ச ஒழிப்பு போலீஸார் எதிர்ப்புத் தெரிவித்தனர். கணபதியை, கஸ்டடியில் வைத்து விசாரிக்க உள்ளதால், ஜாமீன் வழங்கக் கூடாது என்று லஞ்ச ஒழிப்பு போலீஸார் விளக்கமளித்தனர். அதேபோல, கணபதிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று, நீதிமன்றத்தில் மேலும், 20 புகார்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கும் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. மேலும், கணபதிக்கு ஜாமீன் வழங்கினால், அவர் சாட்சிகளை கலைத்துவிடுவார் என்றும் அரசுத்தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது. இதையடுத்து, கணபதியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, கணபதிக்கு ஜாமீன் கேட்டு மீண்டும் மனுத்தாக்கல் செய்வோம் என அவரது வழக்கறிஞர் ஞானபாரதி கூறியுள்ளார்.


[X] Close

[X] Close