வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (08/02/2018)

கடைசி தொடர்பு:17:40 (08/02/2018)

`எங்களுடைய கனவு நிறைவேறுமா?' - எதிர்பார்ப்பில் பொதுமக்கள்

தேனி மாவட்டம், தேவாரம் அருகே உள்ள T.மீனாட்சிபுரத்திலிருந்து சாக்கலூத்துமெட்டுக்கு சாலை அமைக்க வேண்டும் என்பது தேவாரம் பகுதி மக்களின் பல ஆண்டு கோரிக்கை மட்டுமல்லாமல், கனவும்கூட. வெறும் கேரளாவின் தூக்குப்பாலம் என்ற இடத்துக்கான இணைப்புச் சாலையான இந்தச் சாக்கலூத்துமெட்டுச் சாலை வெறும் 4.5 கிலோ மீட்டர் தூரம் கொண்டது.

வனத்துறையின் அனுமதி மறுப்பால் கிடப்பில் போடப்பட்ட இச்சாலைக்காகத் தொடர்ந்து போராடிவரும் 18-ம் கால்வாய் விவசாயச் சங்கத்தின் செயலாளர் திருப்பதிவாசகனிடம் பேசியபோது, ''1981-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரால் அடிக்கல் நாட்டப்பட்டதே இந்தச் சாக்கலூத்துமெட்டுச் சாலை. இச்சாலை அமைய இருக்கும் இடம் வனத்துறைக்குச் சொந்தமானது என்பதால், 1987-ம் ஆண்டு வனத்துறை ஏதேதோ காரணங்களைக் கூறி அனுமதி மறுத்தது. தொடர் போராட்டங்களை அடுத்து 2007-ம் ஆண்டு, கொள்கை ரீதியாக வனத்துறை இச்சாலையை ஏற்றுக்கொண்டது. அதைத் தொடர்ந்து பல்வேறு காரணங்களைக் கூறி சாலைப் பணிகளுக்கு அனுமதி மறுத்தது வனத்துறை. தற்போது துணை முதல்வர் பன்னீர்செல்வம், தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை நேரில் அழைத்து வந்து சாக்கலூத்துமெட்டுச் சாலை அமைய இருக்கும் இடத்தை நேரில் ஆய்வு செய்தனர். விரைவில் சாக்கலூத்துமெட்டுச் சாலை அமையும் என உறுதியளித்துள்ளனர். இதனால், தேவாரம் பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்’’ என்றார்.

''பல்வேறு சூழ்நிலைகளில் சாக்கலூத்துமெட்டுச் சாலைக்கு வனத்துறை அனுமதி மறுத்திருக்கிறது. வெறும் 2 மீட்டர் அகலம் கொண்ட நடைபாதையாக மட்டுமே இருக்கும் சாக்கலூத்துமெட்டுப் பாதையை  மக்கள் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை. மாறாக கடத்தலுக்கும், சமூக விரோத செயல்களுக்கும் மட்டுமே பயன்பட்டுவருகிறது. விரைவில் இப்பகுதியில் தார்ச்சாலை அமைத்தால், முறையான கண்காணிப்பில் சாலை கொண்டுவரப்பட்டு எளிதில் கேரளாவுக்குப் பயணம் செய்ய முடியும். பன்னீர்செல்வம் மற்றும் திண்டுக்கல் சீனிவாசனின் ஆய்வுப் பணி என்பது அப்பகுதி மக்களின் மனதில் நம்பிக்கையை விதைத்திருக்கிறது. சாலை அமைக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்'' என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.