`5 மாதமாகச் சம்பளம் தரல' - ஆர்ப்பாட்டத்தில் பொங்கிய துப்புரவுப் பணியாளர்கள்! | sweepers are agitating in nellai for salary

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (08/02/2018)

கடைசி தொடர்பு:17:52 (08/02/2018)

`5 மாதமாகச் சம்பளம் தரல' - ஆர்ப்பாட்டத்தில் பொங்கிய துப்புரவுப் பணியாளர்கள்!

தமிழகம் முழுவதும் கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு 5 மாதமாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து நெல்லையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

நெல்லை மாவட்ட கிராம துப்புரவுத் தொழிலாளர்கள், சந்திப்பு ரயில் நிலையம் முன்பாக தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அதில் 7 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள 12,526 கிராம ஊராட்சிகளில் 25,000-க்கும் அதிகமான துப்புரவுப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில், கடந்த 2013-ம் ஆண்டு முதல் பணியில் அமர்த்தப்பட்ட 16,728 துப்புரவுப் பணியாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்குப் பின்னர் காலமுறை ஊதியம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். 

ஆனால், அவர்களுக்கு இதுவரையிலும் காலமுறை ஊதியம் வழங்கப்படவில்லை. அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவும் இல்லை. அதனால் அவர்களுக்கு நிலுவைத் தொகையுடன் கூடிய காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும். அத்துடன், கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் 5000-க்கும் அதிகமான ஊழியர்களுக்குக் கடந்த 5 மாதகாலமாக சம்பளம் வழங்கப்படவில்லை. ஊராட்சி நிர்வாகத்தில் நிதி இல்லாததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. அதனால் துப்புரவுப் பணியாளர்களுக்கு மாநில அரசின் கருவூலத்திலிருந்து சம்பளம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக துப்புரவுத் தொழிலாளர் நலவாரியம் செயல்படாமல் முடங்கிக்கிடக்கிறது. அதனால் தொழிலாளர்களின் அடிப்படைக் கல்வி மற்றும் உயர் கல்விக்கான தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். தொற்றுநோய் ஏற்படக்கூடிய அபாயகரான தொழில் செய்து வரக்கூடிய துப்புரவுப் பணியாளர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல்பரிசோதனை நடத்தப்பட வேண்டும். அத்துடன், வருடத்தில் ஒரு மாதம் ஊதியத்துடன் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு தூய்மைத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவரான சக்திவேல் பேசுகையில், ’’தூய்மைப் பணியாளர்கள் நலனில் அரசு போதிய அக்கறை காட்ட வேண்டும். இந்தக் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னரும் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால்,  மார்ச் 7 அல்லது 8-ம் தேதிகளில் சென்னையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்’’  எனத் தெரிவித்தார்.