வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (08/02/2018)

கடைசி தொடர்பு:17:30 (08/02/2018)

வயது, அந்தஸ்தைக் கருதி முன்னாள் பிரதமருக்கு குறைந்தபட்ச தண்டனை கொடுத்த நீதிபதி!

ங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவுக்கு மோசடி வழக்கில் 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வங்கதேச தேசியக் கட்சித் தலைவரான அவரால் அடுத்த தேர்தலில் போட்டியிட முடியாது என்று சொல்லப்படுகிறது.  

கலிதா ஜியாவுக்கு சிறைத்தண்டனை

வெளிநாட்டிலிருந்து ஷியா அறக்கட்டளைக்கு வந்த நிதி 2,52,000 அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் 2 கோடி) மோசடி செய்ததாக டாக்காவில் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. 2014-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும், இந்த வழக்கில் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் உள்ளிட்ட மேலும் 4 பேருக்கும் 10 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரக்மான் லண்டனுக்குத் தப்பி ஓடிவிட்டார். 

''தற்போது 72 வயதான கலீதா ஜியாவின் வயது மற்றும் சமூக அந்தஸ்தைக் கருத்தில் கொண்டு குறைந்தபட்சத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது'' எனத் தீர்ப்பளித்த நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். 

2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை வங்கதேசப் பிரதமராக இருந்தபோது, இத்தகைய அறக்கட்டளைகள் ஏற்படுத்தி நிதி முறைகேட்டில் ஈடுபட்டார் என்பது கலீதா ஜியாமீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு. இப்படி அவர் மீது 10 வழக்குகள் உள்ளன.

 வரும் டிசம்பரில் வங்கதேசத்தில் மீண்டும் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கலீதாவுக்குத் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது வங்கதேச தேசியக் கட்சிக்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. 

வங்க தேச தற்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக 20 வருடங்களாக அரசியல் செய்து வருபவர் கலீதா ஜியா. 'தனக்கு தண்டனை வழங்கப்பட்டது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் மீண்டும் வருவேன்' எனவும் கலீதா ஜியா தீர்ப்புக்குப் பின் தெரிவித்துள்ளார்.

தீர்ப்பு வழங்கப்பட்டதும் டாக்காவில் நீதிமன்றத்துக்கு வெளியே திரண்டிருந்த வங்கதேச தேசியக் கட்சித் தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். போலீஸார் பலர் படுகாயமடைந்தனர். டாக்காவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க