வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (08/02/2018)

கடைசி தொடர்பு:17:50 (08/02/2018)

பாஸ்போர்ட்க்கு விண்ணப்பித்தால் இனி ஆன்லைனிலேயே போலீஸ் விசாரணை! - மதுரையில் ஆப் அறிமுகம்

40 காவல்நிலையங்களில் ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட்களை போலீஸ் விசாரணை செய்யும் ஆப் ஒன்று மதுரையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பாஸ்போர்ட் பெற ஒருவர் விண்ணப்பித்த உடன், அந்த நபர் மீது ஏதாவது குற்ற வழக்குகள் இருக்கா என்று விசாரணை நடத்தக்கோரி சம்பந்தப்பட்ட காவல்நிலையத்துக்கு பாஸ்போர்ட் அலுவலகம் ஆவணங்களை அனுப்பும். இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களை நேரில் சந்தித்து விசாரணை நடத்துவதோடு, அவர்கள்மீது வழக்குகள் இருக்கா என்றும் சரிபார்த்து ஆவணங்களை மீண்டும் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு காவல்துறை அனுப்புவது வழக்கம். இதற்கு குறைந்தது ஒரு மாதம் ஆகும்.

இந்தக் கால தாமதத்தைக் குறைக்கவும் சிரமங்களைத் தவிர்க்கவும் 'பாஸ்போர்ட் பெறுவதற்காக விண்ணப்பிக்கும்போது அதற்கான போலீஸ் விசாரணை இனி ஆன்லைன் மூலம் நடைபெறு உள்ளது. இது தொடர்பாகப் பாஸ்போர்ட் அலுவலகத்தின் மதுரை மண்டல மேலாளர் அருண்பிரசாத் கூறுகையில், "பாஸ்போர்ட் சேவைகள் துரிதமாக்கப்பட்டுள்ளன. மதுரையில் ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் குறித்த விசாரணை மேற்கொள்ளும் வசதியை தென்மண்டல காவல்துறைத் தலைவர் சைலேஷ்குமார் யாதவ் இன்று (8.2.2018) தொடங்கி வைத்துள்ளார். இது மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும்.

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எம்.பாஸ்போர்ட் செயலி மூலமாக இந்தக் கால விரயம் தவிர்க்கப்படும். இதனால் காலதாமதம் தவிர்க்கப்படுவது மட்டுமன்றி ஆவணங்களும் பாதுகாப்பாகக் கையாளப்படும். இந்த எம்.பாஸ்போர்ட் திட்டம் இன்று முதல் தென் மண்டலம் முழுவதும் நடைமுறைக்கு வரும்" என்றார். இந்த நிகழ்ச்சியில் மதுரை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் மணிவண்ணன் கலந்துகொண்டார்.