``சபதம் போட்டவர் சசிகலா; நிறைவேற்றுபவர்கள் இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்!''

அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டபோது, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவுக்குச் சிலை வைக்க முடிவு செய்யப்பட்டது. அதன் பிறகு, கட்சி நிர்வாகிகளுக்குள் ஏற்பட்ட விரிசல் காரணமாக உள்கட்சி பிரச்னையைத் தீர்க்கவே அவர்களுக்கு நேரம் போதவில்லை. சிறையில் சசிகலா, கட்சியை விட்டு வெளியே போன   டி.டி.வி.தினகரன் தனி ரூட்டில் சென்றுகொண்டிருக்கிறார். பல்வேறு அரசியல் அதிரடி மாற்றங்களுக்குப் பிறகு இப்போதுதான் ஜெயலலிதா சிலை வைக்கும் பணி தொடங்கியிருக்கிறது. ராயப்பேட்டையில் கட்சித் தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர் சிலை அருகே ஜெயலலிதா சிலை நிறுவப்படுகிறது. அவரது பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதி சிலை திறப்பு விழா கோலாகலமாக நடக்கிறது. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அந்தச் சிலையைத் திறந்துவைக்கிறார்கள்.

சிலை வைக்கும் பணிக்காக, எம்.ஜி.ஆர் சிலை அருகே இருந்த அ.தி.மு.க கொடிக்கம்பம் அகற்றப்பட்டு வேறு இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர் சிலையைச் சுற்றியிருந்த மேடை அகற்றப்பட்டு, ஜெயலலிதா சிலை அமைப்பதற்கு இன்று குழி தோண்டப்பட்டது. முதல்வர் பதவியிலிருந்து விலக்கப்பட்ட, ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்கினார். அப்போது, தனக்கு எதிரான அலையை ஒடுக்க, ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆர் சிலையை சசிகலா திறந்துவைத்தார். ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் ஜெயலலிதாவுக்குச் சிலை வைக்கவும் அவர் திட்டம் தீட்டினார். கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்த அ.தி.மு.க மகளிர் அணி கூட்டத்தில், ஜெயலலிதா சிலை நிறுவ தீர்மானம் போட்டார்கள்.

பெங்களூரு சிறையிலிருந்து பரோலில் வந்து ஜெயலலிதா சிலையை சசிகலா திறந்து வைப்பார் என்று அப்போது சொன்னார்கள். பின்னர், அ.தி.மு.க உள்கட்சி பிரச்னை, அரசியல் நிகழ்வுகள் என்று நிலைமைகள் தலைகீழாக மாறிப்போனதால் சசிகலா குடும்பமே தனி ரூட்டில் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஜெயலலிதா சிலை வரும் 24ம் தேதி திறக்கப்படுகிறது. சசிகலா போட்ட சபதத்தை பன்னீரும் எடப்பாடியும் இப்போது நிறைவேற்றப்போகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!