வெளியிடப்பட்ட நேரம்: 17:51 (08/02/2018)

கடைசி தொடர்பு:17:51 (08/02/2018)

“பருவம் தவறி பெய்த மழையால் விவசாயிகளுக்குப் பாதிப்புதான்!” வேதனையில் விவசாயிகள்!

மழை

“பருவம் தவறி பெய்த மழையால் விவசாயிகளுக்குப் பாதிப்புதான்” எனத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புச் செயலாளர் நல்லுசாமி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

கடுங்குளிர்வாட்டிய மார்கழி மாதத்தின்போதே ஒருசில இடங்களில் மழைபெய்து மக்களை இன்னும் குளிர்வித்தது. மார்கழியில் பெய்த இந்த மழைக்கு, காற்றழுத்தத் தாழ்வு நிலைதான் காரணம் என்று சென்னை வானிலை மையம் கூறியிருந்தது. அதேவேளையில், பருவமழையின் அளவு குறைந்ததால் பகல் நேரங்களில் வெயிலும் வாட்டியெடுத்தது. இந்த நிலையில், “தென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டலத்தில் கொண்டிருக்கும் மேலடுக்குச் சுழற்சி, தமிழகக் கடலோரத்தில் மையம்கொண்டிருப்பதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணிநேரத்துக்கு லேசான மழைபெய்ய வாய்ப்புள்ளது என்றும், இதனால் சென்னையில் ஓரளவு மேகமூட்டமாகக் காணப்படும் என்றும், சில இடங்களில் அதிகாலையில் மூடுபனி இருக்கும்” என்று சென்னை வானிலை மையம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தது. அதன்படி ஒருசில இடங்களில் மழையும் பெய்தது. 

இந்த நிலையில், தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவும் (7-2-18), இன்று அதிகாலையும் மழை பெய்தது. சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது. இதேபோன்று தேனி, நாமக்கல், மதுரை, கிருஷ்ணகிரி, கரூர், பெரம்பலூர், தர்மபுரி, தூத்துக்குடி, திருவள்ளூர், சேலம், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்தது. தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி, பெரியகுளம், வடுகப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும், குறிப்பாகப் போடிநாயக்கனூர் அருகே தேவாரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஒருமணி நேரம் பலத்த மழை பெய்தது. மதுரை மாவட்டத்தில் மேலூர், கொட்டாம்பட்டி , கீழையூர், வெள்ளரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும், நாமக்கல் மாவட்டத்தில் பரமத்திவேலூர் பகுதியிலும், கரூர் மாவட்டத்தில் வேலாயுதம்பாளையம் பகுதியிலும், விழுப்புரம் மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை பகுதியிலும், திருச்சி மாவட்டத்தில் முசிறி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழை பெய்தது. கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் ஆங்காங்கே மிதமான மழை பெய்தது. கொடைக்கானலில் நேற்று காலை லேசான மழை பெய்தது. பின்னர், மாலை நேரத்தில் கனமழை பெய்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

நல்லுசாமி திடீரென்று பெய்த மழை குறித்து வானிலை மைய ஆய்வு இயக்குநர் எஸ்.பாலசந்திரனிடம் பேசினோம். “மேற்கு நோக்கிச் சென்ற காற்றும், கிழக்கு நோக்கிச் சென்ற காற்றும் ஒன்றையொன்று சந்தித்துக்கொண்டதால் இந்த மழை பெய்திருக்கிறது. இதன் காரணமாக, இன்றும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானதுவரை மழை பெய்ய வாய்ப்புள்ளது” என்றார்.

தமிழகத்தில் நேற்று இரவும் இன்று அதிகாலையும் பெய்த மழை, சில இடங்களில் சிறு தூறலாகவும், இன்னும் ஒருசில இடங்களில் மிதமான மழையாகவும் பெய்தது. இந்த மழை விவசாயத்துக்குச் சாதகமா... பாதகமா எனத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புச் செயலாளர் நல்லுசாமியிடம் பேசினோம். “நேற்று பெய்த மழை பரவலாகத் தமிழகம் எங்கும் பெய்திருக்கிறது. இது, சில இடங்களில் குறைவாகவும், ஒருசில இடங்களில் அதிகமாகவும் பெய்திருக்கிறது. இந்த நிலையில் அரசாங்கம், சம்பா பயிருக்குக் காலம் தாழ்த்தி தண்ணீர்விட்டதால், விவசாயிகளும் காலம் தாழ்த்தியே சாகுபடி செய்தனர். அதனால், இப்போதுதான் அறுவடைக் காலம் என்பதால், தமிழகம் முழுவதும் விவசாயிகள் பயிர்களை அறுவடை செய்துவருகின்றனர். அதேபோல் மானாவாரிகளில் சாகுபடி செய்யப்பட்ட தானியப் பயிர்களுக்கும் இப்போதுதான் அறுவடை நடக்கிறது. ஆக, பருவம் தவறிச் செய்த சாகுபடியாலும், பருவம் தவறிப் பெய்த இந்த மழையாலும் விவசாயிகளுக்குப் பாதிப்புதான்” என்றார் வேதனையோடு.

மழை, பெய்தும் கெடுக்கிறது... பெய்யாமலும் கெடுக்கிறது!
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்