'செக்'கில் போலி கையெழுத்து - நண்பனிடமே கைவரிசை காட்டிய அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர்

போலி கையெழுத்துப்போட்டு 3.50 லட்சம் மோசடி செய்த வழக்கில் அ.தி.மு.க அம்மா பேரவை ஒன்றியச் செயலாளர் உட்பட 3 பேர் கைது செய்து சிறையில் அடைத்திருக்கும் சம்பவம் அரியலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவர் தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு குழு கமிட்டியின் மாநிலத் தலைவராக உள்ளார். இவர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வாயிலாக ரோடு கான்ட்ராக்ட் வேலை செய்துவருகிறார். ரோடு வேலை செய்ததற்காக அரசு வழங்கப்பட்ட 3.50 லட்சம் தொகைக்கான காசோலையை விஸ்வநாதன் நண்பர் மருதூர் கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க அம்மா பேரவை ஒன்றியச் செயலாளர் செந்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்திலிருந்து காசோலையை பெற்றுக்கொண்டு கும்பகோணத்தில் உள்ள ஒரு வங்கியில் விஸ்வநாதன் என்பவரின் பெயரில் போலி கையெழுத்துப்போட்டு பணத்தை எடுத்திருக்கிறார். அதே விஸ்வநாதன் பெயரைச் சொல்லி பல மோசடிகளும் செய்திருக்கிறார் என்பது தெரியவந்தது.

இது குறித்து அரியலூர் மாவட்டக் காவல்துறை அலுவலகத்தில் விஸ்வநாதன் புகார் அளித்தார். அதன் பேரில் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து அ.தி.மு.க அம்மா பேரவை ஒன்றியச் செயலாளர் செந்தில், கும்பகோணம் அருகே நாச்சியார்கோயில் பகுதியைச் சேர்ந்த கோகுல், சாமிநாதன் ஆகியோரைக் கைதுசெய்து ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 15 நாள் நீதிமன்றக் காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!