``இருப்பிடத்தைத் தூய்மையாக வைத்துக்கொ‌ள்ளு‌ங்க‌ள்; மனம் தானாகத் தூய்மையாகும்!" - கோபிநாத் பேச்சு

தூய்மை இந்தியா திட்டம்

மத்தியில் கடந்த 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பா.ஜ.க அரசு செயல்படுத்திய முக்கிய திட்டங்களில், தூய்மை இந்தியா திட்டமும் ஒன்று. தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள தூய்மையான நகரங்கள் குறித்து மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் ஆய்வு நடத்தி, தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி, 2016-ம் ஆண்டில் நடந்த ஆய்வின்படி தூய்மை நகரப் பட்டியலில் திருச்சி மாநகராட்சி மூன்றாவது இடத்தைப் பிடித்தது. ஆனால், கடந்தாண்டு நடந்த ஆய்வின் முடிவில் திருச்சி மாநகராட்சி ஆறாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டது. அதிலிருந்து, திருச்சியை முதலாவது இடத்துக்கு கொண்டுவர திருச்சி மாநகராட்சி ஆணையம் நிறைய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக, தூய்மை குறித்த விழிப்பு உணர்வை மக்களிடம் எளிமையாகக் கொண்டு சேர்ப்பதற்காகக் கடந்த வாரம் `முதலிடம் நோக்கி' என்னும் குறும்படம் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து தூய்மை இந்தியா திட்டத்தில் திருச்சியின் தூதுவராக நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அந்த விழா திருச்சி தேவர் ஹாலில் இன்று நடைபெற்றது. 

விழாவில் கலந்துகொண்டு பேசிய மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், இதுவரை தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் மாநகராட்சி செய்த பல்வேறு விழிப்பு உணர்வுகளையும் பணிகளையும் பட்டியலிட்டுப் பேசினார். அதைத் தொடர்ந்து, திருச்சியின் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் எடுக்கப்பட்ட முதலிடம் நோக்கி குறும்படம் மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது என்றும் தெரிவித்தார். 

அதைத் தொடர்ந்து பேசவந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர் கோபிநாத் பேசும்பொழுது, 

"குப்பை ஒரு சமூக வரலாறு. இந்த உலகிலேயே குப்பைகளில்தான் ஆயிரமாயிரம் ரகசியங்கள் மறைந்திருக்கின்றன. உலகில் உள்ள அனைத்து நாடுகளும் தங்களிடம் எந்த வளம் அதிகம் இருக்கின்றதோ அதைக் கொ‌ண்டுதா‌ன் தங்களது தேசங்களைத் தூய்மையாக வைத்திருக்கிறார்கள். நமது இந்தியாவில் நாம் கொண்டிருக்கும் மிகப்பெரிய வளம் மனிதர்கள்தாம். உலகில் அதிகளவு இளைஞர்களைக் கொண்ட தேசம் நமது இந்தியாதான். இன்று தூய்மையில் முதன்மையாக இருக்கும் தேசங்கள் அனைத்தும் தனிமனித ஒழுக்கத்தின் மூலம்தான் நாட்டை தூய்மையாக வைத்திருக்கின்றன. அவர்கள் அனைவரும் தங்களிடம் உள்ள குப்பைகளை சட்டைப்பையில் வைத்திருப்பார்கள். எங்கே அவர்கள் குப்பைத்தொட்டியைக் காண்கிறார்களோ அங்கே அவர்கள் அந்தக் குப்பையைப் போடுவார்கள். இந்தியா போன்ற ஒரு பரந்து விரிந்து கிடக்கும் தேசத்தைக் குப்பைகள் இல்லாத தேசமாக மாற்றுவது என்பது கடினமான ஒன்றுதான்.

நமது மக்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான், தூய்மையாக இருப்பது அவ்வளவு கடினமான ஒன்றல்ல. உங்களது இடத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ளுங்கள். குப்பைகள் நம்மிடம் இருந்தால் அதைப் பையில் வைத்துக்கொண்டு குப்பைத்தொட்டியில் போட வேண்டும். உங்களது இருப்பிடத்தைத் தூய்மையாக வைத்துக்கொ‌ள்ளு‌ங்க‌ள். உங்களது மனது தானாகத் தூய்மையாகும். குப்பைகளால் சூழப்பட்ட இந்தியாவை அயல்நாட்டவர்கள் பார்க்கும்போது அவர்களுக்கு நம் நாட்டின்மீது நல்ல அபிப்பிராயம் தோன்றுமா. திருச்சி தமிழகத்தின் தலைநகராகும் வாய்ப்புதான் கனவோடு கனவாக முடிந்துவிட்டது. இதோ, இந்தியாவின் தூய்மையான நகரங்கள் பட்டியலில் திருச்சி முதலிடம் பெறுவதற்கான அரிய வாய்ப்பு நாம் வாழும் காலத்திலேயே நமது கரங்களில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்துக்கு நான் மட்டும் தூதுவரல்ல. நாட்டின்மீது பெரும் அக்கறைகொண்ட மக்கள் அனைவரும் தூதுவர்கள்தாம். வாருங்கள் மாற்றத்தை உண்டாக்குவோம்" என்றார். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!