வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (08/02/2018)

கடைசி தொடர்பு:20:00 (08/02/2018)

நெம்பர் பிளேட் இருக்கு....புது வண்டியைக் காணோம்!- பைக் ஸ்டாண்டில் கைவரிசை காட்டிய கொள்ளையன்

திருப்பூர் மாநகராட்சி பைக் ஸ்டாண்டில் நூதன முறையில் நடைபெற்றிருக்கும் திருட்டுச் சம்பவம் ஒன்று காவல்துறையை ஏகத்துக்கும் கடுப்பேற்றியிருக்கிறது.

திருப்பூர் மாநகரப் பழைய பேருந்து நிலையம் அருகே மாநகராட்சி பைக் ஸ்டாண்டு செயல்பட்டு வருகிறது. பரபரக்கும் தொழில் நகரம் என்பதால், இந்த ஸ்டாண்டில் எந்நேரமும் அதிகளவு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், திருப்பூரில் வசித்து வரும் செந்தில் என்ற வாலிபர் தான் புதிதாக வாங்கியிருந்த பைக்கை, இந்த மாநகராட்சி பைக் ஸ்டாண்டில் நிறுத்திவிட்டு பேருந்தில் பொள்ளாச்சிக்குச் சென்றிருக்கிறார். அங்குள்ள கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மீண்டும் திருப்பூர் வந்து இறங்கிய செந்திலுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

திருப்பூர் வந்திறங்கிய செந்தில், தன்னுடைய வாகனத்தை எடுப்பதற்காக பைக் ஸ்டாண்டுக்குச் செல்ல, அங்கு தான் நிறுத்திவிட்டுச் சென்ற பைக்கை காணவில்லை. ஆனால் அந்த பைக்கின் நெம்பர் பிளேட் மட்டும் வேறொரு பழைய பைக்கில் பொருத்தப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த செந்தில், உடனே அங்கிருந்த பணியாளரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அந்தப் பணியாளரும் தனக்கு எதுவும் தெரியாமல் குழம்பிப்போய் நிற்க, பின்னர் பைக் திருட்டுச் சம்பவம் தொடர்பாக திருப்பூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

திருப்பூர் மாநகரில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் பைக் திருட்டுச் சம்பவங்களால், பெரும் அச்சத்தில் இருக்கிறார்கள் வாகன ஓட்டிகள்.  தற்போது நெம்பர் பிளேட்டை மட்டும் விட்டுவிட்டு திருடும் பைக்குக்குப் பதிலாக வேறு ஒரு பைக்கை நிறுத்திவிட்டு போகும் நூதனத் திருட்டையும் கொள்ளைக் கும்பல்கள் தொடங்கியிருப்பதால், அவர்களை ஆத்திரத்துடன் தேடி வருகிறது திருப்பூர் காவல்துறை.