"அரசின் முடிவைப் பொறுத்தே எங்கள் முடிவும்..?" - வேலைநிறுத்தத்தில் மின்வாரிய ஊழியர்கள் | TNEB employees on strike, what's going to be the government strata

வெளியிடப்பட்ட நேரம்: 18:50 (08/02/2018)

கடைசி தொடர்பு:18:50 (08/02/2018)

"அரசின் முடிவைப் பொறுத்தே எங்கள் முடிவும்..?" - வேலைநிறுத்தத்தில் மின்வாரிய ஊழியர்கள்

மின்வாரியம்

பொங்கலுக்கு முன் தமிழகத்தையே பெரும் பாதிப்புக்குள்ளாக்கியது போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டம். ஊதிய உயர்வு, பணிச்சுமை, கொடுக்கப்படாத நிலுவைத்தொகை போன்ற காரணங்களுக்காக இந்தப் போராட்டத்தைப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் நடத்தினர். அதேபோலத் தங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றச் சொல்லி இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்ததால், பிப்ரவரி 16-ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக மின்வாரியத் தொழிற்சங்கங்கள் முடிவெடுத்துள்ளன.

தமிழ்நாடு முழுவதும் சுமார் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்வாரியப் பணியாளர்கள் வேலைசெய்து வருகின்றனர். இவர்கள் குறைந்தபட்ச ஊதியமாக ரூபாய் 18 ஆயிரம், கணக்கீட்டுக் காரணியாக 2.57, பஞ்சப்படியாக 125 சதவிகிதம் கேட்டு நெடுநாள்களாகப் போராடி வருகின்றனர். ஆனால், அரசுத் தரப்பிலிருந்து 2.57 சதவிகிதம் தரமுடியாது. அதற்குப் பதிலாக 2.40 சதவிகிதம்தான் தரமுடியும் என்று சொல்லிவருகின்றனர். இதற்காகக் கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மின்வாரியத் தொழிற்சங்கங்கள், மின்வாரிய அதிகாரிகள் மற்றும் அரசுத் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால், தற்போதுவரை மின்வாரியப் பணியாளர்களின் கோரிக்கைகளை அரசு மறுத்துவருகிறது. இதனைத் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில், வருகிற பிப்ரவரி 12-ம் தேதிக்குள் மின்வாரியத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாக்கப்படும் என்று தொழிலாளர் ஆணையர் தெரிவித்ததன் அடிப்படையில் மின்வாரியப் பணியாளர்கள் அமைதியாகச் சென்றுவிட்டனர். இன்றைய தேதிவரை அதற்கான எவ்வித முயற்சியும் அரசுத் தரப்பிலிருந்து எடுக்காததால், வருகிற 16-ம் தேதி மின்வாரியத் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளன.

சுப்பிரமணியன்

சுப்பிரமணியன்

இதுபற்றித் தமிழ்நாடு மின்வாரியத் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியனிடம் பேசியபோது, "தொழிற்சங்கங்களின் முத்தரப்பு ஒப்பந்தம்மூலம் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்கவேண்டும். ஆனால், இப்போதுவரை நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வை அரசு ஏற்க மறுக்கிறது. கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம்முதல் எங்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், வழங்கப்படவில்லை. இதற்காகக் கடந்த 26 மாதங்களாகப் போராடியும், அரசுத் தரப்பு மற்றும் மின்வாரிய அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துவிட்டன. '2.57 சதவிகித ஊதிய உயர்வு, குறைந்தபட்ச சம்பளமாக ரூபாய் 18 ஆயிரம், பஞ்சப்படி இணைப்பு 125 சதவிகிதம், வழங்கப்பட வேண்டிய நிலுவைத்தொகை, பணிச்சுமை குறைப்பு' என நாங்கள் தற்போது கேட்பது இவற்றைத்தான். இதனைக் கேட்டுப் பலமுறை பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஆனால், பயனில்லை. 

கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மின்வாரியத் துறை அமைச்சர் தங்கமணி, நிதித்துறைச் செயலாளர் கே.சண்முகம், மின்வாரிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடந்தது. அதில், நிதித்துறைச் செயலாளர் எங்கள் கோரிக்கைகளை ஏற்க மறுத்துவிட்டார். 'நாங்கள் கேட்ட 2.57 சதவிகித காரணி தரமுடியாது. அதற்குப் பதிலாக 2.40 சதவிகித காரணியும், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு தரமுடியாது; 10 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் ஊதிய உயர்வும் தருவோம்' என்று சொல்லிவிட்டனர். அதனால், இந்தப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இப்படி அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்ததால், கடந்த 23-01-2018 அன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தோம். ஆனால், அதற்கு முதல்நாளான 22-01-2018 அன்று அரசுத் தரப்பு மற்றும் மின்வாரிய அதிகாரிகள் எங்களைப் பேச்சுவார்த்தை நடத்த அழைத்தனர். அதில் ஒரே முடிவாக எங்கள் கோரிக்கைகளைச் சொன்னோம். 'வருகிற பிப்ரவரி 12-ம் தேதிக்குள் எங்களின் கோரிக்கைகளுக்கான ஒப்பந்தம் நிறைவேற்றுவதற்கான முயற்சிகளைச் செய்கிறோம்' என்று சொன்னார்கள். ஆனால், இன்றுவரை அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதனால், வருகிற 16-ம் தேதி C.I.T.U, N.L.O, B.M.S, பா.ம.க. தொழிற்சங்கம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொழிற்சங்கம், தே.மு.தி.க தொழிற்சங்கம், அம்பேத்கர் அமைப்புத் தொழிற்சங்கம் போன்ற தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளோம். மேலும், அனைத்துத் தொழிற்சங்கங்களுக்கும் அழைப்புவிடுத்திருக்கிறோம். இந்த வேலை நிறுத்தம் ஒருநாள் வேலை நிறுத்தமா அல்லது தொடர் வேலைநிறுத்தமா என்பது அரசின் கையில்தான் இருக்கிறது" என்றார்.

அமைச்சர் தங்கமணி

அமைச்சர் தங்கமணி

இதுகுறித்து மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணியிடம் பேசியபோது, "தொழிற்சங்கங்களுடன் அரசு தீவிரமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இப்போது திடீரென வேலைநிறுத்தம் என்பது ஏதோ அரசியல் வேலைபோலத் தெரிகிறது. தொழிலாளர்களுக்கு இணக்கமான அரசாகத்தான் இந்த அரசு செயல்படுமே தவிர, ஒருபோதும் தொழிலாளர்களுக்கு எதிராகச் செயல்படாது. நடந்துகொண்டிருக்கும் பேச்சுவாரத்தையில் இந்தப் பிரச்னைக்குச் சுமுக முடிவு எட்டப்படும்" என்றார்.

தொழிலாளர்களை நோகடிப்பதுதான் அரசின் செயலா?


டிரெண்டிங் @ விகடன்