வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (08/02/2018)

கடைசி தொடர்பு:21:00 (08/02/2018)

’’கள் இறக்கும் போராட்டத்தைத் தொடர்ந்து கரென்ட் எடுக்கும் போராட்டம்!’’ - திருப்பூர் விவசாயிகள் அதிரடி


விவசாயிகள்

கள் இறக்கி விற்பனை செய்ய தமிழ்நாட்டில் தடையுள்ளது. 1987 ம் ஆண்டுமுதல் உள்ள இந்தத் தடை நீக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து நீண்டகாலமாகப் போராடிவருகிறது கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம். அந்தப் போராட்டத்தின் ஒரு அங்கமாகத் தடையை மீறி, கள் இறக்கி விற்பனை செய்யும் போராட்டத்தை கடந்த ஜனவரி 21 ம் தேதி முதல் அறிவித்து, அதை செயல்படுத்தியும் வருகிறது இந்தச் சங்கம்.

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர், குண்டடம்,பல்லடம், தாராபுரம் ,காங்கேயம் மற்றும் குடிமங்கலம் உள்ளிட்ட ஒன்றிய பகுதிகள் மற்றும் கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர், சுல்தான்பேட்டை, அன்னூர், தொண்டாமுத்தூர் ஒன்றியப் பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட தென்னை விவசாயிகள் தங்களது தோப்புக்களில் கள் இறக்கி விற்பனை செய்து வருகிறார்கள். ஒரு விவசாயி தலா 25 தென்னை மரங்களில் மட்டுமே கள் இறக்க வேண்டும் என்கிற விதியை விவசாயிகள் சங்கமே விதித்துள்ளது. அதன் அடிப்படையில் கள் இறக்கி விற்பனை செய்யப்படுகிறது. காவல்துறை மற்றும் மதுவிலக்கு போலீஸார் அடிக்கடி ரோந்து வந்து தென்னை மரங்களில் உள்ள கள் பானைகளை உடைத்து, சம்பந்தப்பட்ட விவசாயி மீது வழக்கு தொடுக்கிறார்கள். நீதிமன்றத்தில் அபராதம் செலுத்தி விட்டு வந்து, கள் இறக்கும் போராட்டத்தை விவசாயிகள் தொடர்கிறார்கள். உடைப்பதும், பிடிப்பதும், கள் வடிப்பதும் தொடர்ந்து நடப்பது ஒருபுறம் இருக்க, இப்போது புதிய அஸ்திரம் ஒன்றை மின்சார வாரியத்தை நோக்கி வீசியுள்ளது கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் மற்றும் அதன் ஒரு பிரிவான ஏர்முனை இளைஞர் அணி ஆகியவை.

வெற்றிகடந்த பிப்ரவரி 6 ம் தேதி திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதியில் தென்னை விவசாயிகள் வாழ்வுரிமை மாநாடு ஒன்றை நடத்தியது. அதில் பங்கேற்றுப்பேசினார் கட்சிசார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் செயல் தலைவர் என்.எஸ்.பி.வெற்றி.

``மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத், கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட நமது அண்டை மாநிலங்களில் கள் இறக்கி விற்பனை செய்யப்படுகிறது. அங்குள்ள விவசாயிகள் வாழ்வாதாரம் அதனால் உயர்ந்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் கள் இறக்கி விற்க தடையுள்ளது. அந்தத் தடை நீக்கப்படும் வரை கள் இறக்கும் போராட்டம் தொடர்ந்து நடக்கும்.

அதேபோல், விவசாய பம்ப் செட் மோட்டார்களுக்குத் தமிழக அரசு இலவச மின்சாரம் வழங்கி வருகிறது. அதேசமயம் புதிதாக மின் இணைப்பு கேட்டு விண்ணப்பம் கொடுத்துள்ள விவசாயக் கிணறுகளுக்குக் கடந்த 12 ஆண்டுகளாக இலவச மின் இணைப்பு வழங்கப்படவில்லை. மின்மிகை மாநிலம் என்று பெருமை பேசும் தமிழக அரசு, விவசாய மோட்டார்களுக்கு மின் இணைப்பு கொடுக்காமல் இழுத்தடிக்கிறது.

எனவே, காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் விவசாயிகளின் மின்மோட்டர்களுக்கு உடனடியாக இலவச மின்சாரம் வழங்கப்பட வேண்டும். இல்லையென்றால் வரும் ஜுலை 5 ம் தேதி முதல் விவசாயிகள் தங்கள் விவசாயக் கிணறுகளில் பொருத்தப்பட்டுள்ள மின்மோட்டர்கள் இயங்கத் தேவையான மின்சாரத்தை, அவர்கள் வயலின் அருகில் செல்லும் மின்கம்பிப் பாதையிலிருந்து கொக்கி போட்டு எடுத்துக்கொள்வார்கள்” என்று மின்சார வாரியத்திற்கு ‘ஷாக்‘‘கொடுத்தார் வெற்றி.